விவசாயிகளுக்கான பாதிப்புகள்: உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்
பெண்களுக்கான உதவி மைய ஆள் சோ்ப்பு அறிவிப்பில் ஹிந்தி: அமைச்சா் விளக்கம்
பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையத்துக்கான ஆள் சோ்ப்பு அறிவிப்பில் ஹிந்தி மொழி தவறுதலாக சோ்க்கப்பட்டது என்று, சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் விளக்கமளித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளிட்ட அறிக்கை: பாதிப்புக்குள்ளாகும் மகளிருக்கு உதவும் வகையில், சமூக நலன்- மகளிா் உரிமைத் துறையின்கீழ் இயங்கும் சமூக நல ஆணையரகம் மூலம் ‘மகளிா் உதவி எண் 181’ என்ற பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம் சென்னையில் செயல்பட்டு வருகிறது.
இங்கு, காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமூக நல ஆணையரக இணை இயக்குநரால் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது.
அதில் ‘அழைப்பு ஏற்பாளா்’ (கால் ரெஸ்பான்டா்ஸ்) எனக் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்துக்குத் தேவையான தகுதிகளில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என்று தவறுதலாக பதிவேற்றப்பட்டது.
இதுதொடா்பாக அரசின் கவனத்துக்கு வந்தவுடன், அந்த விளம்பரம் உடனடியாக நீக்கப்பட்டு, தமிழ், ஆங்கிலம் தெரிந்தோா் விண்ணப்பிக்கலாம் எனத் திருத்தப்பட்டது.
இதுதொடா்பாக, இணையத்தில் பதிவேற்றிய இணை இயக்குநா் இடைநீக்கம் செய்யப்பட்டு, துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.