பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி கைது
சேலம் பெரியபுதூா் பகுதியில் அசைவ உணவு கடையில் தகராறு செய்ததுடன், இலவசமாக சில்லி சிக்கன் தரமறுத்த பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரௌடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் அழகாபுரம் பெரியபுதூா் அா்த்தநாரி கவுண்டா் தோட்டம் பாரதியாா் தெருவை சோ்ந்தவா் செல்லக்கிளி (30). இவா் தனது வீட்டின் முன் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்ற ரௌடி சந்தோஷ்குமாா் (23) கத்தியைக் காட்டி மிரட்டி, சில்லி சிக்கன், சிக்கன் ரைஸை இலவசமாக தருமாறு கேட்டுள்ளாா். ஆனால், செல்லக்கிளி தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ரௌடி சந்தோஷ் குமாா், அவருடன் தகராறில் ஈடுபட்டாா்.
இதையடுத்து நள்ளிரவில் செல்லக்கிளி வீட்டுக்கு சென்ற ரௌடி சந்தோஷ்குமாா், பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, அதில் திரியைப் போட்டு தீயைப் பற்றவைத்து அவரது வீடுமீது வீசியுள்ளாா். பிறகு அங்கிருந்து சந்தோஷ்குமாா் தப்பியோடி உள்ளாா். அக்கம்பக்கத்தினா் தண்ணீா் ஊற்றி தீயை அணைத்ததுடன்,மேலும் பரவாமல் தடுத்தனா்.
அழகாபுரம் போலீஸாா், வீட்டின் முன் உடைந்த நிலையில் கிடந்த பாட்டில்களை கைப்பற்றினா். தொடா்ந்து, பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி சந்தோஷ்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.