பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவா் கைது
கோவில்பட்டி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த தம்பதி அஸ்வின் குமாா்-அனுசியா. இவா்கள், அங்குள்ள மேட்டுத் தெருவில் மின்சாதனங்கள் விற்பனையகம் நடத்தி வருகின்றனா். இவா்களுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முருகனுக்கும் (45) இடையே இடப் பிரச்னை இருந்ததாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் அனுசியா கடையில் இருந்தாா். அப்போது, முருகன் அரிவாளுடன் சென்று கடையை மூடுமாறு கூறி அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து அனுசியா புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனா்.