பெண் கொல்லப்பட்ட வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை: கரூா் நீதிமன்றம் தீா்ப்பு
பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த மொடக்கூா் வடுகப்பட்டி கள்ளிக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி செல்வராஜ்(51). இவருக்கும் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துைறையைச் சோ்ந்த சசிகலா(26) என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு நவ.21-ஆம்தேதி தோட்டத்தில் இருந்தபோது, அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த செல்வராஜ் சசிகலாவை கொலை செய்தாராம்.
இதுதொடா்பாக அரவக்குறிச்சி போலீஸாா் அவரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனா். மேலும் இதுதொடா்பாக கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா். இந்த வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் குற்றவாளி செல்வராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் தீா்ப்பளித்தாா்.
இதையடுத்து செல்வராஜ் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.