107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
பெண் வனச்சரக அலுவலர் தற்கொலை முயற்சி... தொடர் சர்ச்சையில் வேலூர் வனக்கோட்டம்!
வேலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட ஒடுகத்தூர் வனச்சரகத்தில், வனச்சரக அலுவலராக இந்து (32) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், அலுவலக வளாகத்திலுள்ள குடியிருப்பில் தங்கியிருந்த இந்து நேற்றைய தினம் திரவம் ஒன்றைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அவரின் கணவர் இந்துவை மீட்டு ஒடுகத்தூர் பகுதியிலுள்ள கிளினிக்கிற்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். வனச்சரகர் இந்துவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பணிச்சுமைக் காரணமாக வனச்சரக அலுவலர் இந்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வருகின்றன.
ஏற்கெனவே, `திட்ட முறைகேடு தொடங்கி, ஏல குத்தகை பாக்கி வரை..’ வேலூர் வனக்கோட்டத்தில் சர்ச்சைகள் நீடிக்கின்றன. `ஒடுகத்தூர் வனச்சரகத்திலும் குத்தகைதாரர் ஏலத்தொகையைச் செலுத்தாமல் போனதால், அந்தத் தொகையை வனக்காவலர்களிடம் இருந்து வசூலிக்க உயரதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர்’ எனவும் சர்ச்சைகள் வெளிவந்தன.
இந்த நிலையில்தான் வேலூர் மாவட்ட வன அலுவலர் குருசுவாமி தபாலா தலைமையில் நேற்று ஒடுகத்தூர் பகுதியில் முகாம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. இந்த முகாமில் கலந்துகொள்ளாமல் வனச்சரக அலுவலர் இந்து, விபரீத முடிவை எடுத்தது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேக கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றன.
இந்துவின் கணவர் சந்தோஷும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வனச்சரக அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். திருமணமாகி ஓராண்டே ஆகிறது. வார விடுமுறையில் மனைவி இந்துவை பார்க்க வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார் சந்தோஷ். நேற்று விடுமுறையையொட்டி, அவர் வீட்டுக்கு வந்த நேரத்தில்தான் கண்ணாடியைச் சுத்தப்படுத்தக்கூடிய திரவத்தை குடித்திருக்கிறார் இந்து. சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நலம் தேறி வருகிறது.
`பணியில் ஏற்பட்ட மன அழுத்தமே காரணம்’ என்ற கோணத்தில் இந்தச் சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் போலீஸாரும் விசாரணையைக் கையாண்டு வருகிறார்கள். இந்த நிலையில், `என்ன நடந்தது?’ என விசாரிப்பதற்காக வேலூர் மாவட்ட வன அலுவலர் குருசுவாமி தபாலாவின் செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டோம். பெண் ஒருவர் போனை எடுத்தார். அவரிடம் நாம் யார் என்கிற விவரத்தைச் சொல்லிவிட்டு குருசுவாமி தபாலாவிடம் பேச வேண்டும் என்றோம். உடனே அந்தப் பெண் அழைப்பைத் துண்டித்துவிட்டார். இதையடுத்து, மாவட்ட வன அலுவலரின் அலுவலக எண்ணைத் தொடர்புகொண்டோம். போனை எடுத்த அலுவலக உதவியாளரும் `மாவட்ட வன அலுவலரிடம் பேச முடியாது’ எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அதனை உரிய பரிசீலனைக்கு பின் பதிவிட தயாராக இருக்கிறோம்.