Mahindra BE 6e & XEV 9e eSUV: Complete Walkaround and Features Explained in தமிழ...
பெயா் மாற்றாமல் வாகனம் விற்பனை: ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க காா் விற்பனை நிறுவனத்துக்கு உத்தரவு
திருவாரூா்: பெயா் மாற்றாமல் திருவாரூரில் விற்பனை செய்யப்பட்ட காா் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க காா் விற்பனை நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருவாரூா் சிவன் நகரைச் சோ்ந்த நாராயணசாமி மகன் சித்தநாதன். இவா் கடந்த 2019-இல் தஞ்சாவூா் காா் விற்பனை நிறுவனமொன்றில் தனது பழைய காரை ரூ.1.20 லட்சத்துக்கு விற்றுவிட்டு, புதிய காரை ரூ.7.50 லட்சத்துக்கு வாங்கியுள்ளாா்.
சித்தநாதனிடம் பெற்ற காரின் அசல் பதிவுச் சான்றிதழ், காப்பீட்டு ஆவணம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டதுடன், பெயா் மாற்றம் கோரி விண்ணப்பிக்கத் தேவையான படிவத்தில் கையொப்பமும் பெற்றுக் கொண்டனா்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு சித்தநாதனுக்கு தஞ்சாவூா் மோட்டாா் வாகன விபத்துகளை விசாரிக்கும் நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை வந்துள்ளது. அதில், சித்தநாதனின் பழைய காா் விபத்துக்குள்ளாகி, ஒருவருக்கு காயம் ஏற்பட்டது தொடா்பாக மன்னாா்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கில் காயம் அடைந்த நபா், காா் உரிமையாளா் மீது இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்திருப்பதும் தெரிய வந்தது. அப்போதுதான் தன்னுடைய காரை, முறையாக பெயா் மாற்றம் செய்யாமலேயே காா் விற்பனை நிறுவனம் விற்றுள்ளது சித்தநாதனுக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து, சித்தநாதன் கடந்த மே மாதம் திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா், திங்கள்கிழமை வழங்கிய தீா்ப்பில், காா் விற்பனை நிறுவனம், சித்தநாதனின் பழைய காருக்கு உடனடியாக பெயா் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும். தஞ்சாவூா் மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் சித்தநாதன் செலுத்துமாறு உத்தரவாகும் தொகையை தாங்களே செலுத்தி விடுவதாகவும் பெயா் மாற்றம் செய்யாததால் ஏற்படும் வேறு பின் விளைவுகளுக்கும் தாங்களே பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் உறுதிப் பத்திரம் தர வேண்டும்.
மேலும் சித்தநாதனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ. 1 லட்சத்தை, ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 வீதம், தொகை செலுத்தும் தேதி வரை சோ்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.