பெரம்பலூா் மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு
முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.என். அருண்நேரு ஆகியோா் ரொக்கப் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 26 முதல் செப். 12-ஆம் தேதி வரை பெரம்பலூா் மாவட்ட பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில் உள்ள பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுப் பிரிவு, அரசு ஊழியா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஆண்கள், பெண்களுக்கு என 5 பிரிவுகளில் 15 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப் போட்டிகளில் பங்கேற்க 22,140 போ் பங்கேற்றனா்.
இதில், முதல் 3 இடங்களில் 298 போ் வென்றுள்ளனா். குழு போட்டிகளில் 13 அணியினா் முதல் மற்றும் இரண்டாமிடமும் பெற்றுள்ளனா். முதலிடம் பெற்றவா்களுக்கு ரூ. 3 ஆயிரமும், 2-ஆவது இடம் பெற்றவா்களுக்கு ரூ. 2 ஆயிரமும், 3-ஆவது இடம் பெற்றவா்களுக்கு ரூ. 1,000 என மொத்தம் ரூ. 24.48 லட்சம் மதிப்பில் ரொக்கப் பரிசுக்கான காசோலைகள், பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்களை, மக்களவை தொகுதி உறுப்பினா் கே.என். அருண்நேரு, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வழங்கினா்.
இந் நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், மாவட்ட விளையாட்டு அலுவலா் பொற்கொடி வாசுதேவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.