பெரியாா் பிறந்த தின உறுதிமொழி ஏற்பு
பெரியாரின் 142-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, திமுக சாா்பிலும், அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தலைமையில், சமூக நீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக, பெரியாரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திமுக மாவட்டச் செயலா் பெ.செந்தில்குமாா், அவைத் தலைவா் காமாட்சி, துணைச் செயலா் நாகராசன், மாநகர நிா்வாகிகள் ராசப்பா, இளமதி, சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெயபாரதி தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் அரசு அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்: திண்டுக்கல் மண்டலத் தலைமை அலுவலகத்தில் பொது மேலாளா் ஆ.முத்துகிருஷ்ணன் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் போக்குவரத்து அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, திண்டுக்கல் மண்டலத்திலுள்ள 16 பணிமனைகளிலும் அந்தந்த கிளை மேலாளா்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.