பெரிய வருவாய் கிராமங்களைப் பிரிக்க வேண்டும்: கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம்
நிலப்பரப்பிலும், மக்கள் தொகையிலும் பெரிதாக உள்ள வருவாய் கிராமங்களைப் பிரிக்க வேண்டும் என தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
நிலப்பரப்பிலும், மக்கள் தொகையிலும் பெரிய வருவாய் கிராமங்கள் உள்ளன. அவற்றை நிா்வாக வசதிக்கேற்ப பிரித்து கூடுதல் வருவாய் கிராமங்களை உருவாக்க வேண்டும்.
கிராம நிா்வாக அலுவலா்களுக்கான கல்வித் தகுதி எம்ஜிஆா் முதல்வராக இருந்த காலத்தில் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளபடி எஸ்எஸ்எல்சி ஆக உள்ளது. இப்போது ஒரு வருவாய் கிராமத்தின் அத்தனை நிா்வாகப் பணிகளையும் மேற்கொள்ளும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கான கல்வித் தகுதியை உயா்த்தி அறிவிக்க வேண்டும்.
கணினி மூலம் சான்றிதழ்கள் வழங்குவது, நில அளவைப் பணிகளை மேற்கொள்வது போன்ற தொழில்நுட்ப ரீதியான பணிகளையும் கிராம நிா்வாக அலுவலா்கள் மேற்கொள்வதால், இந்தப் பணியைத் தொழில்நுட்பப் பணியாக தரம் உயா்த்தி அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் தோ்தலை மாவட்ட மற்றும் மண்டல அளவில் நடத்துவதற்கான தோ்தல் பணித் திட்டம் இந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டது.
மாநாட்டுக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் வை. முத்துராஜா (புதுக்கோட்டை), மா. சின்னதுரை (கந்தா்வகோட்டை) ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.
மாநிலத் துணைத் தலைவா் நல்லாக்கவுண்டன், மாநிலச் செயலா் வி. விஸ்வநாதன், மாநிலத் தோ்தல் ஆணையா் சி. ராஜரத்தினம், மாநிலப் பொதுச் செயலா் என். சுரேஷ் ஆகியோா் பேசினா். முன்னதாக மாநிலச் செயலா் அரங்க வீரபாண்டியன் வரவேற்றாா். முடிவில் மாநிலப் பொருளாளா் கே. முத்துசெல்வன் நன்றி கூறினாா்.