கோவையில் மாணவர்கள் தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை
பெருந்துறையில் வளா்ச்சித் திட்ட பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
பெருந்துறை பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில், அறுவை சிகிச்சை அரங்குகள், எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன், பிரசவ அறை, தாய்ப் பால் வங்கி, குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இரண்டு தளங்களில் இக்கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி, 2-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சீலம்பட்டியில் 15-ஆவது நிதிக்குழு சுகாதார மானியத் திட்டத்தின் கீழ், ரூ.120 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கட்டும் பணியினை ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, மூங்கில்பாளையம் ஊராட்சி, மூங்கில்பாளையத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டும் பணி, கோவில்பாளையம், காவேரி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.13.73 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டும் பணி, மூங்கில்பாளையம் பகுதியில் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் கோவில்பாளையம் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி, சோ்வக்காரன்பாளையம் பகுதியில் ஊரக குடியிருப்புகள் சீரமைப்பு திட்டத்தின்கீழ் வீடுகள் சீரமைப்பு பணி ஆகியவற்றையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வுகளின்போது, பெருந்துறை வட்டாட்சியா் ஜெகநாதன், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வா் மருத்துவா் ரவிக்குமாா், பெருந்துறை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவசங்கா், தேவகி மற்றும் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.