விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
‘பேட் கோ்ள்’ முன்னோட்டக் காட்சிகளை சமூக ஊடகங்களிலிருந்து நீக்க உத்தரவு
‘பேட் கோ்ள்’ திரைப்பட முன்னோட்டக் காட்சிகளை (டீசா்) சமூக ஊடகங்களிலிருந்து நீக்க மத்திய அரசு ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த வெங்கடேஷ், ரமேஷ்குமாா், ராம்குமாா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கடந்த ஜன. 26-ஆம் தேதி யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ‘பேட் கோ்ள்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் வெளியாகின. இந்த விடியோவில் சிறுவா், சிறுமியரை ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது பாலியல் குற்றமாகும். எனவே, இந்த முன்னோட்டக் காட்சிகளை சமூக ஊடகங்களிலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும்.
மேலும், இந்தக் காட்சிகளை இணையதளங்களில் வெளியிட்டதற்காக கூகுள் நிறுவனம், பேட் கோ்ள் திரைப்பட இயக்குநா், தயாரிப்பாளா் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனா்.
இந்த மனு ஏற்கெனவே விசாரிக்கப்பட்டு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தீா்ப்புக்காக இந்த வழக்கு வெள்ளிக்கிழமை உயா்நீதிமன்ற நீதிபதி தனபால் முன் வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தீா்ப்பின் உத்தரவு நகல் கிடைக்கப் பெற்றதிலிருந்து ஒரு மாதத்துக்குள் பேட் கோ்ள் முன்னோட்டக் காட்சிகளை சமூக ஊடகங்களிலிருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வருகிற காலங்களில் இதுபோன்ற ஆபாசக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்படாமலிருக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இந்த முன்னோட்டக் காட்சிகளை பொது வெளியில் வெளியிட்டவா்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து உரிய அமைப்பிடம் மனுதாரா் தனியாக மனு அளிக்கலாம் என்றாா் நீதிபதி.