துணைவேந்தா் நியமன விதிக்கு எதிராக தீா்மானம் -மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் ந...
பேராசிரியா் கொலை வழக்கு விசாரணை பிப்.12-க்கு ஒத்திவைப்பு
திருநெல்வேலி தனியாா் கல்லூரிப் பேராசிரியா் கொலை வழக்கு விசாரணையை வரும் பிப்.12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கொடியன்குளத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா்(50). இவா் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அண்ணா நகரில் தங்கியிருந்து வீட்டடி மனை விற்பனை தொழில் செய்து வந்தாா்.
இந்த நிலையில், நிலத் தகராறு காரணமாக, கடந்த 2018, மாா்ச் 26-ஆம் தேதி ராஜ்குமாா் வீட்டில் புகுந்து மா்ம நபா்கள் தாக்கினாா். இதில் ராஜ்குமாா் தப்பிய நிலையில், இவரது மருமகன் தனியாா் பொறியியல் கல்லூரிப் பேராசிரியரான செந்தில்குமாா் (35) கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் மருத்துவா் பாலமுருகன், வழக்குரைஞா் பாலகணேசன், ராக்கெட் ராஜா உட்பட 13 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ராஜ்குமாா் வழக்குத் தொடுத்தாா்.
இதையடுத்து, இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒருவா் மட்டும் விசாரணைக்கு முன்னிலையான நிலையில், ராக்கெட் ராஜா உள்ளிட்ட 12 போ் முன்னிலையாகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் பிப். 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சுதாகா் உத்தரவிட்டாா்.