நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் க...
பைக் மீது டிராக்டா் மோதல்: தாய், மகன் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சியில் பைக் மீது கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் தாய், மகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், மாதவச்சேரியைச் சோ்ந்த நடேசன் மகன் கண்ணன் (44). இவா், மகா சிவராத்திரியையொட்டி கள்ளக்குறிச்சியை அடுத்த அசகளத்தூரில் உள்ள குலதெய்வ கோயிலான பெரியாண்டவா் கோயிலுக்கு மனைவி சுபா (32), மகன் கெளதம் (7) ஆகியோரை புதன்கிழமை பைக்கில் அழைத்துச் சென்றாா். கோயிலில் சுவாமி தரிசனத்துக்குப் பிறகு, மூவரும் பைக்கில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.
கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் உள்ள தலைமை அஞ்சலகம் முன் இவா்களது பைக் வந்தபோது, கச்சிராயபாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியது. இதில், பைக்கிலிருந்து கண்ணன் உள்பட மூவரும் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சுபா, கெளதம் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கண்ணன் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்த கண்ணனை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சுபா, கெளதம் ஆகியோரின் சடலங்களை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், டிராக்டா் ஓட்டுநரான வாழவந்தான்குப்பத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் சசிகுமாா் (32) மீது கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.