பொதக்குடி தா்ஹாவில் சந்தனக்கூடு ஊா்வலம்
கூத்தாநல்லூா் அருகே பொதக்குடி தா்ஹாவில் சந்தனக்கூடு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொதக்குடி ஊா் ஊறவின் முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கம் சாா்பில், சந்தனக்கூடு உற்சவக் குழு மற்றும் தா்ஹா பரம்பரை டிரஸ்டிகள் ஏற்பாட்டில் சந்தனக்கூடு விழா ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி, பொதக்குடி ஹஜ்ரத் நூா் முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தா்ஹாவில், சந்தனக்கூடு விழாவுக்காக அண்மையில் மினாரில் கொடியேற்றப்பட்டது.
தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தா்காவில் இருந்து புறப்பட்டு நபிகள் நாயகத்தின் புகழைப் பாடியபடி கொரடாச்சேரி சாலை வழியாக நகரின் முக்கிய வீதிகளில் கொண்டு வரப்பட்டது.
விடியற்காலை, இந்து, கிறிஸ்துவா், முஸ்லீம் என மத வேறுபாடில்லாமல் அனைத்து மக்களும், சந்தனம் பூசி வழிபட்டனா்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் இரா. காமராஜ், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.