"மதுரைக்காரர்கள் என்றால் உங்களுக்கு இளக்காரமாக இருக்கிறதா?" - முதல்வர் மு.க.ஸ்டா...
போடி நகராட்சித் தலைவர் வீடு, கடைகளில் GST, ED, வருமானவரி மூன்று துறையினர் சோதனை - என்ன காரணம்?
தேனி மாவட்டம் போடி நகராட்சி நகர் மன்றத் தலைவராக இருப்பவர் ராஜராஜேஸ்வரி. இவருடைய கணவர் சங்கர், திமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும், போடி 29ஆம் வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார். இவர்களுடைய மகன் லோகேஷ் இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவர்கள் தமிழகம்-கேரளா பகுதிகளில் ஏலக்காய் கொள்முதல் செய்து, வெளிமாநிலங்களுக்கு வர்த்தகம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த தீபாவளி பண்டிகை முன்பாக 300 டன் ஏலக்காய் போடி ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கு சங்கர் மற்றும் அவருடைய மகன் லோகேஷ் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு அனுப்பப்பட்ட ஏலக்காய் முறையான ஆவணங்கள் இல்லாமல் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வருமான வரித்துறையினர் ஆவணங்கள் இல்லாமல் சென்ற ஏலக்காயை கைப்பற்றியதாகவும், அது குறித்த விசாரணை மேற்கொண்டதில் தொடர்ச்சியாக ஆவணங்கள் இல்லாமல் பல வருடங்களாக இதுபோன்று ஏலக்காய் வட மாநிலங்களுக்கு ரயில் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சங்கர் வீட்டிற்கு வந்து விசாரணைக்கு வருமாறு சம்மன் கொடுத்து சென்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தராமல் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று சங்கருக்கு சொந்தமான வீடு, ஏலக்காய் வர்த்தக குடோன், கேரளா - இடுக்கி மாவட்டம் கடுக்கன் சிட்டியில் உள்ள கடை மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை செய்யத் தொடங்கினர். சங்கர், அவரது மனைவி ராஜராஜேஸ்வரி, மகன் லோகேஷ் மூவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் விசாரணைக்கு வரும் வரை சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் போடி பகுதியில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
















