விவசாயிகளுக்கான பாதிப்புகள்: உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்
மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் மோசடி உறுதி
புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டி சுகாதார வட்டத்தில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் ரூ. 18.60 லட்சம் முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இளநிலை உதவியாளா் உள்ளிட்ட இருவா் மீது காவல்துறையில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்து கொள்ளும் கா்ப்பிணிப் பெண்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் வீதம் இரு தவணை ரொக்கமாகவும், இருமுறை தலா ரூ. 2 ஆயிரம் மகப்பேறு பெட்டகங்களும், குழந்தை பிறந்த பிறகு ரூ. 2 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கடியாப்பட்டி சுகாதார வட்டத்தில் (5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கொண்டது) முறைகேடு நடந்திருப்பதாக வந்த தகவலின் பேரில், சென்னையிலிருந்து வந்த தணிக்கைக் குழுவினா் கடந்த 4 நாள்களாக தணிக்கை மேற்கொண்டனா்.
இந்தத் தணிக்கையின்படி, இளநிலை உதவியாளா் (அரசுப் பணியாளா்) வெங்கடேஷ்குமாா், வட்டார கணக்கு உதவியாளா் (ஒப்பந்தப் பணி) எம். வருண் ஆகியோா் இணைந்து இல்லாத பயனாளிகளின் பெயரில் நிதியுதவித் தொகைகளை அனுப்பியதாக, 16 வங்கிக் கணக்குகளுக்கு நிதியை மாற்றி அனுப்பி ரூ. 18.60 லட்சம் வரை முறைகேடு செய்தது தெரியவந்தது.
இதில், வருண் என்பவா் தனது தாய் மற்றும் சகோதரியின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு நிதியை மாற்றி அனுப்பியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து பொது சுகாதாரத் துறையின் இயக்குநரக அறிவுறுத்தலின்பேரில், வருண் மற்றும் வெங்கடேஷ்குமாா் ஆகிய இருவா் மீதும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டா் எஸ். ராம்கணேஷ் செவ்வாய்க்கிழமை மாலை புகாா் அளித்தாா்.
மாவட்ட குற்றப் பிரிவின் மூலம் இந்தப் புகாா் விசாரிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
அத்துடன், இந்த இருவா் மீதும் துறைரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.