மகாராஷ்டிரா: 4 முறை முதல்வர்; மத்திய அமைச்சராக இருந்தவர்... சரத்பவார் படுதோல்விக்கு என்ன காரணம்?
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்று இருக்கிறது. இந்த கூட்டணி 226 தொகுதிகளில் வெற்றியில், முன்னிலை பெற்று இருக்கிறது. இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி மிகவும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. 56 தொகுதியில் மட்டுமே அக்கூட்டணி வெற்றி அல்லது முன்னிலை பெற்று இருக்கிறது. இத்தேர்தல் பிரசாரத்தின் போது சரத்பவார் தனது ராஜ்ய சபை உறுப்பினர் பதவி முடிந்த பிறகு தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று தெரிவித்திருந்தார். அதாவது அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக குறிப்பிட்டு இருந்தார். இதற்காக சட்டமன்றத் தேர்தலில் சரத்பவார் தீவிர பிரசாரம் செய்தார். எப்படியும் தனது கட்சியை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச்செய்துவிடவேண்டும் என்று சரத்பவார் நினைத்தார்.
தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா
சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 87 தொகுதியில் போட்டியிட்டு வெறும் 12 தொகுதியில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு நடந்த மக்களவைத் தேர்தலில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 தொகுதியில் போட்டியிட்டு 8 தொகுதியில் வெற்றி பெற்றது. இது 80 சதவீத வெற்றியாகும்.
2019ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2022, 23ம் ஆண்டுகளில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்தன. அதன் பிறகு யாருடையது உண்மையான தேசியவாத காங்கிரஸ், சிவசேனா என்ற கேள்வி எழுந்தது. பால்தாக்கரேயின் உண்மையான அரசியல் வாரிசு நாங்கள்தான் என்று ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.
பால் தாக்கரேயின் அரசியல் வாரிசு, உண்மையான தேசியவாத காங்கிரஸ் எது என்பது தொடர்பாக முடிவு செய்யும் தேர்தலாக இந்த சட்டமன்றத் தேர்தல் இருந்தது. சட்டமன்றத் தேர்தலில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 56 தொகுதியிலும், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 39 தொகுதியிலும் வெற்றி பெற்று இருக்கிறது.
தோல்விக்கு காரணம்...
இந்த வெற்றி மூலம் அஜித்பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறா என்று கேட்டதற்கு, மகாராஷ்டிரா அரசியல் பார்வையாளர் பிரகாஷ் கூறுகையில், "ஓரிரு தேர்தலில் அதனை முடிவு செய்துவிட முடியாது. அஜித்பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தங்களை உண்மையான தேசியவாத காங்கிரஸ், சிவசேனா என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் தேர்தல் நேரத்தில் பெண்களுக்கு ரூ.1500 வங்கிக்கணக்கில் போட்டு அவர்களது வாக்குகளை பெற்றுள்ளனர்.
தேர்தல் தோல்விக்கு மராத்தா இட ஒதுக்கீடு பிரச்னையில் சரத்பவார் பெரிய அளவில் எதையும் செய்யவில்லை என்பது மராத்தா இன மக்களின் கோபமாக இருக்கலாம். தற்காலிகமாக வேண்டுமானால் உண்மையான தேசியவாத காங்கிரஸ், சிவசேனா எது என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கலாம். அதற்கு உடனே தீர்வு கண்டுவிட முடியாது'' என்றார்.
சரத்பவார் 1979ம் ஆண்டு தனது 38-வது வயதில் மகாராஷ்டிரா முதல்வரானார். மொத்தம் 4 முறை முதல்வராக இருந்ததோடு, பல முறை மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.
1999-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு சரத்பவார் ஆரம்பித்த தேசியவாத காங்கிரஸ் இப்போது சந்தித்தது போன்ற ஒரு தோல்வியை இதற்கு முன்பு சந்தித்தது கிடையாது.
2019ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு உத்தவ் தாக்கரேயை சரத்பவார் முதல்வராக்கிய பிறகு சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ச்சியாக நெருக்கடி ஏற்பட்டு வந்தது.
ஒரு புறம் அஜித்பவார் தொடர்ந்து பா.ஜ.கவுடன் பேசி வந்தார். மறுபுறம் அமலாக்கப்பிரிவு சரத்பவார் கட்சிக்கு நெருக்கடி கொடுத்து வந்தது. அதன் பிறகு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உடைந்தது. உடைந்ததோடு மட்டுமல்லாமல் அதன் நிறுவன தலைவர்களின் கையில் இருந்து கட்சியும் கைமாறியது. இப்போது சட்டமன்றத் தேர்தலில் சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகிய இருவரும் படுதோல்வியை சந்தித்து இருக்கின்றனர். இத்தோல்வி தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...