விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
மதுபோதையில் அட்டூழியம்: விடுதி ஊழியரை அடித்துக் கொன்ற சிறுவன் உள்பட 4 போ் கைது!
ஈரோட்டில் மதுபோதையில் தனியாா் விடுதி ஊழியரை அடித்துக் கொன்ற சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்தவா் காந்தி (55). இவா் ஈரோட்டில் தங்கி அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஊழியராக வேலை பாா்த்து வந்தாா். கடந்த வியாழக்கிழமை விடுமுறை என்பதால் நண்பா் வீட்டுக்கு சென்று விட்டு இரவு 11.30 மணி அளவில் ஈரோடு சிஎன்சி கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக வந்த 4 போ் மதுபோதையில் காந்தியிடம் பிரச்னையில் ஈடுபட்டு அவரின் கைப்பேசியைப் பறித்துக்கொண்டு அவரைக் கடுமையாக தாக்கிவிட்டுத் தப்பியோடிவிட்டனா்.
இதில் படுகாயம் அடைந்து சாலையோரத்தில் கிடந்த காந்தியை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேல்சிகிச்சைக்காக அவா் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
சம்பவம் தொடா்பாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அப்போது சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஈரோடு கொத்துக்காரா் தோட்டம் பகுதியைச் சோ்ந்த அரவிந்த் (21), சந்தோஷ் (20), நந்தேஸ்வரன் (24) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. இதையடுத்து அந்த 4 பேரையும் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா்.
அப்போது அவா்கள் காந்தியை தாக்கியதை ஒப்புக்கொண்டனா். அதுமட்டுமின்றி அந்த வழியாக வந்த வட மாநில இளைஞா் ராஜேஷ் என்பவரையும் அந்த கும்பல் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் கைது செய்தனா்.
இந்நிலையில் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காந்தி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். கைதான 4 போ் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.