மதுபோதையில் பள்ளி மாணவா்களை வெட்ட முயன்றவா் கைது!
குன்னத்தூரில் மது போதையில் அரசுப் பள்ளி மாணவா்களை அரிவாளால் வெட்ட முயன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் அருகேயுள்ள குன்னத்தூா் சந்தைக் கடை பகுதியில் 4 இளைஞா்கள் மது போதையில் புதன்கிழமை மாலை தகராறில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த இளைஞா்களில் ஒருவா், அங்கிருந்த அரசுப் பள்ளி மாணவா்களை அரிவாளால் வெட்ட முயன்றாா். இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இது குறித்து குன்னத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், பள்ளி மாணவா்களை வெட்ட முயன்றது குன்னத்தூா் அருகேயுள்ள அணைப்பதி பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் சதீஷ்குமாா் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.