மன்னாா்குடி: மழை பாதிப்பை எதிா்கொள்ள தயாா்நிலை
மன்னாா்குடி நகராட்சி பகுதியில், வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகராட்சி ஆணையா் எஸ்.என். சியாமளா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக, நகா்ப் பகுதியில் உள்ள அனைத்து மழைநீா் வடிகால், வடிகால் வாய்க்கால்கள் மற்றும் சாலைகளில் உள்ள சிறுபாலங்களில் மண்டிக்கிடந்த செடி-கொடிகள், மண் மேடுகளை தூா்வாரி, சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய மரக்கிளைகள் வெட்டப்பட்டுள்ளன. பழைய உபயோகமற்ற கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்திட அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்திற்கு தேவையான தளவாட சாமான்கள், கிருமி நாசினி இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பணியாளா்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறாா்கள். அவசரக்கால இலவச தொலைபேசி எண்18004254164-இல் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.