ரஷியாவுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை தேவை: உக்ரைன் புதிய பிரதமர்
மராத்திக்கு எதிரான பேசினாரா ராஜஸ்தான் இளைஞர்? அடித்து ஊர்வலமாகக் கூட்டிச் சென்ற ராஜ் தாக்கரே கட்சி
மகாராஷ்டிராவில் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியினர் மராத்திக்காகவும், மராத்தி மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தி பேச வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஏற்கனவே வெளிமாநிலக் கடைக்காரர்கள் மராத்தி பேசவில்லை என்பதற்காக அவர்களை ராஜ் தாக்கரே கட்சியினர் அடித்த சம்பவங்கள் நடந்துள்ளன.

ராஜ் தாக்கரே கட்சியின் இச்செயலை எதிர்த்து மும்பையில் வெளிமாநில வியாபாரிகள் பந்த் நடத்தினர். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்து இருந்தார். தற்போது ராஜ் தாக்கரே கட்சியினர் மீண்டும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த கடைக்காரர் ஒருவரை அடித்து உதைத்துள்ளனர்.
மும்பை விக்ரோலி தாக்குர் நகரைச் சேர்ந்த கடைக்காரர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டு இருந்த பதிவில், ''ராஜஸ்தானியர்களின் சக்தியைப் பாருங்கள். மகாராஷ்டிராவில் மராத்தியர்களையே முந்திவிட்டோம். நாங்கள் மார்வாரிகள். எங்கள் முன்பு யாரும் நிற்க முடியாது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இப்பதிவு வைரலானதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் வாட்ஸ் ஆப் பதிவை வெளியிட்ட கடைக்காரின் கடைக்கு வந்தனர். அவர்கள் தொழிலதிபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதோடு மராத்தியர்களை அவமதித்ததாகக் கூறி அக்கடைக்காரரை அடித்தனர். வாட்ஸ் ஆப் பதிவுக்காக மன்னித்துவிடும்படி கூறும்படி கூறினர். உடனே கடைக்காரரரும் கேமராவைப் பார்த்து மன்னித்துவிடும்படி கூறினார்.
தொழிலதிபர் கையெடுத்து கும்பிட்டு, "இனி இது போன்று தவறு செய்யமாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என்று கூறும் வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

அத்தொழிலதிபர் தனது இரண்டு கைகளால் காதைப் பிடித்துக்கொண்டு இனி இத்தவறைச் செய்யமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதோடு விடாமல் அத்தொழிலதிபரை உள்ளூர் மார்க்கெட் வழியாக ஊர்வலமாக அழைத்துச்சென்று போலீஸில் ஒப்படைத்தனர். அவர் மீது முறைப்படி போலீஸில் புகாரும் செய்தனர்.
"இது போன்று இனி மராத்தியர்களுக்கு எதிராகச் செயல்பட்டால் இனி எங்களது நடவடிக்கை கடுமையானதாக இருக்கும்" என்று ராஜஸ்தானி கடைக்காரரிடம் எச்சரித்துவிட்டு சென்றனர்.
மராத்தியவர்களை அவமதிக்கும் கடைகளில் மராத்தியர்கள் பொருட்கள் வாங்கக்கூடாது என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர்களில் ஒருவரான விஷ்வஜித் தெரிவித்தார்.
கடந்த வாரம் மும்பை விரார் பகுதியில் வடமாநில ஆட்டோ டிரைவர் ஒருவர் மராத்தி பேசாத காரணத்திற்காக அவரை அடித்து உதைத்தனர். அதோடு அவரை மன்னிப்பு கேட்கும்படி நிர்ப்பந்தம் செய்தனர். இச்சம்பவங்களை நவநிர்மாண் சேனாவினர் வீடியோ எடுத்து அதில் மராத்தி பாடலைச் சேர்த்து, "மராத்தியர்களுக்கு எதிராகப் பேசினாலோ அல்லது எழுதினாலோ இது போன்றுதான் நடத்தப்படுவார்கள்" என்று எழுதி அந்த வீடியோவை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டனர்.