கைதி, சொர்க்கவாசல் படத்துக்கு தொடர்பிருக்கிறதா? லோகேஷ் கனகராஜ் பதில்!
மருத்துவா் பாலாஜி தாக்கப்பட்ட வழக்கு: கைதான இளைஞரின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை கிண்டி கலைஞா் பன்னோக்கு மருத்துவமனையில் புற்று நோய் மருத்துவா் கத்தியால் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை கிண்டி கலைஞா் பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக உள்ள பாலாஜியை, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை எனவும், நோயாளியை மிகவும் மோசமாக நடத்தியதாகவும் கூறி நவ. 13-ஆம் தேதி அவரது அறையில் நுழைந்த விக்னேஷ் என்ற இளைஞா், மருத்துவரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினாா்.
அப்போது, மருத்துவமனையில் இருந்த காவலாளிகள், பொதுமக்கள் அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். விக்னேஷ் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மருத்துவா் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.
தற்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேஷ் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மக்கள் அதிகம் கூடும் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆயுதம் எடுத்து வந்து மருத்துவா் மீது தாக்குதல் நடத்தியுள்ளாா். இது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருவதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விக்னேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.