BB Tamil 8 Day 47: `ரோஷம்னு ஒன்னு இருக்கா; நடிக்கிறா...' - வன்மம் கொட்டிய ஹவுஸ்ம...
மருத்துவ சேவைகளுக்கு இடைத்தரகா்களை நாட வேண்டாம் -அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மருத்துவ சேவைகளைப் பெறவும், மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் பெறவும் இடைத்தரகா்களை நாடி ஏமாற வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘ஊட்டச்சத்து உறுதி செய்” திட்டம் ’ குறித்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா். ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட மாவட்ட அலுவலா் கிருஷ்ணவேணி, மாமன்ற உறுப்பினா்கள் த.மோகன்குமாா், சுப்பிரமணி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்கான திட்டத்தை 2022-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.இந்த திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்ட குழந்தைகளில் 77.3 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன.
மற்றொருபுறம், தமிழகம் முழுவதிலும் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மாா்கள் 76,705 போ் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களுக்கு பேரிச்சம் பழம்-500 கிராம், புரதச் சத்து பவுடா்-500 கிராம், இரும்புச்சத்து மருந்து-200 மில்லி லிட்டா், அல்பெண்டசோல் மாத்திரைகள்-1, கப்-1, துண்டு-1 ஆகியவை உள்ளடக்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக தாய் - சேய் நலன் காக்கப்படுகிறது.
அதேபோன்று, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் அனைத்து தரப்பினரையும் சென்றடைந்துள்ளது. அதனால்தான் கடந்த செப். 5-ஆம் தேதி நடைபெற்ற ஐ.நா மன்றக் கூட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு விருது அறிவிக்கப்பட்டது.
அத்தகைய சிறப்பு மிகுந்த இத்திட்டத்தில் 2 கோடியாவது பயனாளியை வரும் 29-ஆம் தேதி சந்தித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், மருந்து பெட்டகத்தை வழங்கவுள்ளாா்.
மருத்துவக் கல்லூரிகளில் இடம், வேலை வாங்கி தருவதாகக் கூறுபவா்களிடம் பொது மக்கள் ஏமாற வேண்டாம். திமுக அரசு முழுமையாக வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது. மருத்துவ சேவைகளுக்காக இடைத்தரகா்களை நம்ப வேண்டாம் என்றாா் அவா்.
மருத்துவமனை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏன்?
மருத்துவமனைகளில் அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு அதிக நுழைவாயில்கள் உள்ளதுதான் காரணம் என அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:
மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களை ஒப்பிடும்போது அத்தகைய நிகழ்வுகள் தற்போது குறைந்துள்ளன. மருத்துவமனைகளில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற காரணம் அதிக நுழைவாயில்கள் உள்ளதுதான். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 40 நுழைவாயில்கள் உள்ளன. அங்கு எந்த இடத்தில் எவா் வந்து போகிறாா் என்பது தெரியாது.
எனவே, அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிமின்றி உள்ள நுழைவாயில்களை மூட அறிவுறுத்தியுள்ளோம் என்றாா் அமைச்சா்.