மறுகால் குறிச்சியில் சாலையில் உலவிய கரடி: மக்கள் அச்சம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மறுகால் குறிச்சியில் சாலையில் உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிக்கு வியாழக்கிழமை வந்த கரடியால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
மேற்கு தொடர்ச்சி மலை வனத்தை ஒட்டிய பகுதிகளில் இருந்து வெளியேறும் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் களக்காடு, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாபநாசம், மணிமுத்தாறு போன்ற இடங்களில் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுவது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் மறுகால் குறிச்சியில் இருந்து நாங்குநேரிக்கு செல்லும் சாலையில் வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் கரடி ஒன்று சாலையில் உலவிய சம்பவம், அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆட்டோ ஓட்டுநர் அதிர்ச்சி
மறுகால் குறிச்சியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோமதி ராஜா தனது ஆட்டோவில் நாங்குநேரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் நடுவே அவரது வாகனத்திற்கு முன்பாக நடந்து சென்ற கரடியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கோமதி ராஜா, கவனமாக தனது வாகனத்தை மெதுவாக இயக்கி,கரடியின் பின்னால் சென்றுள்ளார்.
தொடர்ந்து, அந்த கரடி அருகிலிருந்த வாழைத்தோப்புக்குள் சென்று மறைந்ததை அவர் உறுதிப்படுத்தினார். குடியிருப்புகள் நிறைந்த முக்கிய சாலையில் கரடியின் நடமாட்டம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓராண்டில் அனைத்து ரயில் வழித் தடங்களும் மின்மயமாகும்: மத்திய ரயில்வே இணை அமைச்சா்
சமூக வலைதளங்களில் வைரலாகும் விடியோ
இந்த சம்பவத்தை தனது செல்போனில் விடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி, திருநெல்வேலி மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை
எனவே, குடியிருப்புகள் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனத்துறையினர் எச்சரிக்கை
இந்த நிலையில், வனத்துறையினர் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. அதாவது வனப்பகுதிகளுக்கு அருகே செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். கரடியைக் கண்டால் அமைதியாக இருக்க வேண்டும், பயந்தோடக்கூடாது. இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனர்.