மழைக்காலக் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை(ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, அமைச்சர் கிரண் ரிஜுஜு தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை 11.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால், எல். முருகன் மற்றும் காங்கிரஸ், திமுக, அதிமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். திமுக சார்பில் டி.ஆர். பாலு, அதிமுக சார்பில் தம்பிதுரை கலந்துகொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் மோதல் பற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்து, பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதனிடையே மழைக்காலக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.