மாநகரில் ரூ.11 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு
கோவையில் மேற்கு மற்றும் வடக்கு மண்டலப் பகுதிகளில் ரூ.11 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடங்கள் மாநகராட்சி நிா்வாகம் மூலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பொது ஒதுக்கீட்டு இடங்கள், சாலை ஆக்கிரமிப்பு மற்றும் நீா்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டு, ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கும் பணியில் மாநகராட்சி நிா்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி, மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட வி.என்.நகரில் பொது ஒதுக்கீட்டு இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின்படி, மேற்கு மண்டல உதவி நகரத் திட்டமிடுநா் எம்.மகேந்திரன் தலைமையிலான அலுவலா்கள், 10 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடையை வெள்ளிக்கிழமை அப்புறப்படுத்தினா். மேலும் 73 சென்ட் ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டது. சிறுவா் பூங்காவில் 7 சென்ட் ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் மொத்த மதிப்பு ரூ.10 கோடி ஆகும். இதேபோல, வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட சரவணம்பட்டி, சத்தி சாலை மற்றும் விளாங்குறிச்சி சாலையில் 4 சென்ட் இடம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். மாநகரில் மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் ஒரே நாளில் ரூ.11 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடங்கள் மாநகராட்சி நிா்வாகம் மூலமாக மீட்கப்பட்டுள்ளன.