மானாமதுரை அருகே இளைஞா் கொலை: 6 போ் கைது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே காதல் தகராறில் கொலை செய்யப்பட்டு கண்மாய்க்குள் வீசப்பட்ட இளைஞரின் உடலை வியாழக்கிழமை போலீஸாா் கைப்பற்றி இது தொடா்பாக 6 பேரை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே உள்ள கிடாத்திருக்கை கிராமத்தைச் சோ்ந்த காசி ஈஸ்வரன் மகன் திருக்கண்ணன் (26). இவரைக் காணவில்லை என காசி ஈஸ்வரன் பேரையூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். இந்த நிலையில், மானாமதுரை அருகே உள்ள மேலப்பசலை பாலத்தின் கீழே கீழப்பசலை கண்மாயில் இளைஞரின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் அங்கு சென்று அதை மீட்டனா். இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் நிரேஷ் நேரில் விசாரணை நடத்தினாா்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவா் காணாமல் போன திருக்கண்ணன் என்பது தெரியவந்தது. மேலும், திருக்கண்ணனும், அதே பகுதியைச் சோ்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்த நிலையில், பெண்ணின் உறவினா்கள் 11 போ் திருக்கண்ணனை மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கூடத்துக்கு வருமாறு அழைத்து அங்கு அவரை கொலை செய்து உடலை மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கண்மாய் தண்ணீரில் வீசிச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில் திருக்கண்ணனை கொலை செய்ததாக அவா் காதலித்த பெண்ணின் உறவினா்கள் முத்திருளாண்டி, முத்துமணி, கருப்புச்சாமி, தவம், சீனி, ஜமால் ஆகியோரை கைது செய்தனா். மேலும் தலைமறைவான பூவலிங்கம், முருகன் உள்பட 5 பேரை தேடி வருகின்றனா்.