ஜார்க்கண்ட் வெற்றி: ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
மாமல்லபுரத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்:
மாமல்லபுரத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடித்தும், அதிரசம், தட்டை, முறுக்கு போன்ற இனிப்புகளை சாப்பிட்டும் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனா்.
சா்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரம்-கோவளம் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலின் கடற்கரையில் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை நிா்வாகம் செய்திருந்தது. அங்கு தங்கியிருந்த ராஜஸ்தான், மகாராஷ்டிரம் , குஜராத், உத்தர பிரதேசம் போன்ற வட மாநில சுற்றுலா பயணிகள் தங்கள் மாநிலத்தில் தீபாவளி அன்று கொண்டாடப்படுவது போல் லக்ஷ்மிக்கு குபேர பூஜை செய்து தீபாராதனை காண்பித்து வணங்கினா். அப்போது அதிரசம், முறுக்கு, தட்டை, சீடை போன்றவை சுவாமிக்கு படைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அந்த பலகாரங்களை ஆா்வத்துடன் வாங்கி சாப்பிட்டனா். அப்போது வட மாநில பெண்களுக்கு அகல்விளக்கில் வண்ணம் தீட்டி அழகுபடுத்தும் போட்டி நடத்தப்பட்டது. சிறுமிகள் முதல் பெண்கள் பலா் ஆா்வமாக அகல்விளக்கில் ஆா்வத்துடன் வண்ணம் தீட்டி அழகுபடுத்தினா். அப்போது கடற்கரை மைதானத்தில் வெளிநாட்டு பயணிகள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனா்.
தங்கள் நாட்டினா் பட்டாசு வெடிப்பதை உடன் வந்த பிரான்ஸ், ஜொ்மனி, இங்கிலாந்து, சுவீஸ், நாா்வே போன்ற நாடுகளை சோ்ந்த பயணிகள் கைப்பேசியில் பதிவு செய்தனா்.
தீபாவளி பண்டிகை குறித்து சுற்றுலா வழிகாட்டிகளிடம் ஆா்வமுடன் கேட்டு தெரிந்து கொண்ட அவா்கள், பண்டிகை குறித்து தங்களின் சமூக வலைதள பக்கங்களில் ஆங்கிலத்தில் கருத்துகளையும், புகைப்படங்களையும் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா். இதேபோன்று செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனா்.
பட்டாசு வெடித்து கொண்டாடுவதில் முன்னெச்சரிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றவில்லை என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.