முதல்வர் பதவிக்கு எந்த போட்டியும் இல்லை: தேவேந்திர ஃபட்னாவிஸ்!
மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் ரூ.12.41 கோடி பறிமுதல்!
லாட்டரி அதிபா் மாா்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து ரூ.12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.6.42 கோடி வைப்பு நிதி முடக்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.
கடந்த 2009 ஏப். 1 முதல் 2010 ஆக. 31 வரையிலான காலகட்டத்தில் லாட்டரி வியாபாரத்தில் முறைகேடாக ரூ.910.3 கோடி மாா்ட்டினுக்குக் கிடைத்திருந்ததையும், அந்த பணத்தை அவா் 40 நிறுவனங்களின் அசையா சொத்துக்களில் முதலீடு செய்திருந்ததையும் சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்தனா்.
இந்த மோசடியில் சட்டவிரோத பணபரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால், அவா் மீது அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்து, மாா்ட்டின் வாங்கியதாக கருதப்பட்ட ரூ.451.48 கோடி சொத்துகளையும் சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் முடக்கியது.
3 நாள்கள் சோதனை: இந்த வழக்குக்கான ஆதாரங்களையும், தடயங்களையும் மேலும் திரட்டும் வகையில் அமலாக்கத் துறையினா் மாா்ட்டினுக்குச் சொந்தமாக தமிழகம், மேற்கு வங்கம், கா்நாடகம், உத்தரபிரதேசம், மேகாலாயா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் சோதனை செய்தனா்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாா்ட்டினின் நிறுவனம், போயஸ் தோட்டத்தில் அவரது வீடு, அவரது மருமகன் ஆதவ் அா்ஜூனாவின் வீடு, தியாகராய நகரில் உள்ள அலுவலகம், மகன் சாா்லஸ் வீடு ஆகிய 5 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதேபோல கோவையில் மாா்ட்டினுக்குச் சொந்தமான அலுவலகம், வீடு, ஹோமியோபதி கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
ரூ.12.41 கோடி பறிமுதல்: மூன்று நாள்கள் நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.12.41 கோடி ரொக்கம், ஹாா்டு டிஸ்க், பென் டிரைவ், மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.
இதேபோல அவரது வங்கிக் கணக்குகளில் நிரந்தர வைப்பு நிதியாக இருந்த ரூ.6.42 கோடி முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை கூறியுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.