எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் 23 மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தாா்: மு.த...
மீஞ்சூர்: பிளாட்பாரத்தில் வீசப்பட்ட சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம் - சிக்கிய அப்பா, மகள்!
ஆந்திர மாநிலம், நெல்லூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு கடந்த 4-ம் தேதி புறப்பட்ட மின்சார ரயில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது ரயிலிலிருந்து 40 வயது மதிக்கத்தக்க ஆணும் இளம்பெண்ணும் சூட்கேஸ்களுடன் கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் இருவரும் தங்களின் சூட்கேஸ்களை பிளாட்பாரத்தில் வைத்து விட்டு மீண்டும் ரயிலில் ஏற முயன்றனர். அதைப் பார்த்த ரயில்வே பாதுகாப்பு காவலர் மகேஷ், சூட்கேஸ்களை ஏன் பிளாட்பாரத்தில் வைத்துவிட்டு செல்கிறார்கள் என இருவரிடமும் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இருவரும் பதிலளிக்காமல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அதனால் ரயில்வே பாதுகாப்பு படை காவலர் மற்றும் அங்கிருந்தவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம் இருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள், மீஞ்சூர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சூட்கேஸிலிருந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிடிப்பட்ட ஆணிடமும் பெண்ணிடமும் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், ``பிளாட்பாரத்தில் சூட்கேஸை வைத்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றவரின் பெயர் பாலசுப்பிரமணியம். இவர், ஆந்திரா, நெல்லூர் மாவட்டம் ராஜேந்திர நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடன் வந்தது இவரின் 17 வயது மகள் தேவி ஸ்ரீ. சூட்கேஸில் சடலமாக இருந்த பெண்ணின் பெயர் ரமணி (65). இவர் பாலசுப்பிரமணியத்தின் வீட்டில் அருகில் வசித்து வந்தார். ரமணி அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க பிளான் போட்ட பாலசுப்பிரமணியம், அவரை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார். பின்னர் பெட் சீட்டால் ரமணியின் முகத்தை மூடி கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். அதன்பிறகு ரமணி அணிந்திருந்த தாலி செயின், கம்மல் என 50 கிராம் எடையுள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த பாலசுப்பிரமணியம், ரமணியின் சடலத்தை எப்படி அப்புறப்படுத்துவது என குடும்பத்தினருடன் ஆலோசித்திருக்கிறார்.
அப்போது செய்திகளில் சூட்கேஸில் அடைத்து சடலத்தை வீசிய சம்பவங்களை படித்திருக்கிறார். அதன்படி ரமணியின் சடலத்தையும் சூட்கேஸில் அடைத்து சென்னையில் வீசி விட்டு வந்து விடலாம் என கருதிய பாலசுப்பிரமணியம், பெரிய டிராலி சூட்கேஸை வாங்கி அதற்குள் ரமணியின் சடலத்தை அடைத்திருக்கிறார். ரத்தம் வெளியேறாமலிருக்க சடலத்தை பிளாஸ்டிக் கவரால் சுற்றி பாதுகாப்பாக வைத்திருக்கிறார். இதையடுத்து தனியாக சென்றால் சிக்கிக் கொள்வோம் என பயந்த பாலசுப்பிரமணியம், தன்னுடைய மகள் தேவி ஸ்ரீயையும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு செல்லும் மின்சார ரயிலில் ஏறியிருக்கிறார். மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இருட்டான பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் டிராலி சூட்கேஸை வைத்து விட்டு தப்பிச் செல்ல முயன்றபோதுதான் பாலசுப்பிரமணியம், அவரின் மகள் தேவி ஸ்ரீ ஆகியோர் எங்களிடம் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். இதற்கிடையில் ரமணியை காணவில்லை என புகார் ஒன்று கொடுக்கப்பட்ட தகவலும் கிடைத்திருக்கிறது. ரமணி கொலை செய்யப்பட்ட தகவலை அவரின் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளோம். பிரேத பரிசோதனைக்குப்பிறகு ரமணியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்றனர்.