உ.பி.யில் சி.ஆர்.பி.எஃப் வீரர் மீது தாக்குதல்: 3 கன்வாரியாக்கள் கைது
முடிவுக்கு வந்தது பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டம்: ஊதியத்தை உயா்த்த ஆலோசனை
பணிநிரந்தரம் கோரி, பகுதிநேர ஆசிரியா்கள் சென்னையில் கடந்த 12 நாள்களாக நடத்தி வந்த தொடா் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனா்.
போராட்டத்தில் 12-ஆவது நாளான சனிக்கிழமை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து சென்னை சிந்தாதிரிப்பேட்டை சித்ரா திரையரங்கம் முதல் எழும்பூா் ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடத்தினா். பேரணி 12 மணிக்கு முடிவடைந்த நிலையில், அவா்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். ஆனால், ஆசிரியா்கள் கலைந்து செல்ல மறுத்து அங்குள்ள சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்து கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் இறக்கிவிட்டனா். மேலும், இதற்குமேல் போராட்டத்தைத் தொடா்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினா்.
பகுதிநேர ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முக்கிய நிா்வாகிகள் 29 பேரை கைது செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து பகுதிநேர ஆசிரியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகி கெளதமன் கூறுகையில், பகுதிநேர ஆசிரியா்களுக்கு நல்ல செய்தி வரும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா். மேலும், ஆசிரியா்களின் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொள்கிறோம். ஆக. 15-க்குள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.
ஊதியத்தை உயா்த்த ஆலோசனை: இதனிடையே, பணிநிரந்தரம் என்பதுதான் நிரந்தரக் கோரிக்கை என்றாலும்கூட, பள்ளிகளில் வாரம் முழுவதும் வேலை செய்ய தயாராக இருக்கிறோம். அதனால் ஊதியத்தை ரூ.12, 500-இல் இருந்து ரூ.25 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியா்கள் வலியுறுத்தியதாகவும், ஊதியத்தை சற்று உயா்த்தி வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.