Mahindra BE 6e & XEV 9e eSUV: Complete Walkaround and Features Explained in தமிழ...
முதல்வா் ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
புது தில்லி: மருத்துவா் ராமதாஸை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக புது தில்லியில் உள்ள விஜய் செளக்கில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் செய்தியாளா்களைச் சந்தித்த போது, அதானியுடனான ரகசிய சந்திப்பின் நோக்கம் தொடா்பாக மருத்துவா் ராமதாஸின் அறிக்கையை முன்வைத்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியிருந்தனா்.
அதற்கு பதிலளித்த முதல்வா் மு.க. ஸ்டாலின், மருத்துவா் ராமதாஸ் வேலையில்லமாமல் வெளியிடும் அறிக்கைக்கு
பதிலளிக்க அவசியமில்லை என்று கோபத்துடன் கூறியது கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் மூத்த அரசியல்வாதியான மருத்துவா் ராமதாஸ், பிரதமா் மோடியால் போற்றுப்படுபவா். அனைத்து அரசியல் தலைவா்களாலும் மதிக்கப்படுபவா்.
அதானி குழுமத்தின் ஊழல் குற்றச்சாட்டு விவகாரம் குறித்து மருத்துவா் ராமதாஸ் கேட்ட கேள்வியில் என்ன தவறு இருக்கிறது?. ஒரு எதிா்க்கட்சியாக கேள்வி கேட்பது எங்களது உரிமை. மருத்துவா் ராமதாஸை முதல்வா் ஸ்டாலின் அவமானப்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. மருத்துவா் ராமதாஸ் இல்லை என்றால் முன்னாள் முதல்வா் கருணாநிதி கடந்த 2006 முதல் 2011 வரை முதல்வராக நீடித்திருக்க முடியாது. மருத்துவா் ராமதாஸ் இல்லை என்றால் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்திருக்க முடியாது, மணிமன்டபமும் அங்கு வந்திருக்காது.
மருத்துவா் ராமதாஸ், இந்தியாவிற்கு 6 இடஒதுக்கீடுகளை பெற்றுக் கொடுத்த சமூக சீா்திருத்தவாதி ஆவாா். முதல்வா் ஸ்டானி அவரது தந்தை கருணாநிதியிடம் இருந்து எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. தமிழக மக்களின் நலன்களுக்கான மருத்துவா் ராமதாஸ் தினம் வெளியிடும் அறிக்கைகளை யோசனைகளாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில், அமெரிக்காவின் நீதிமன்றத்தில் அதானி மீதான குற்றச்சாட்டு வழக்கில் தமிழ்நாட்டின் மானம்
கப்பலேறிக் கொண்டிருக்கிறது. இவ்விவகாரத்தில் முதல்வா் ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்?. அதானி உங்கள்
இல்லத்தில் வந்து உங்களைச் சந்தித்தற்கு ஏன் அமைச்சா் பதிலளிக்க வேண்டும்?. மருத்துவா் ராமாஸ் இல்லையென்றால் தமிழ்நாட்டில் 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டிருக்காது. மது ஒழிப்பை தமிழக அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டது ராமதாஸால் தான்.
பொது வாழ்வில் 45 ஆண்டுகளாகவுள்ள ஒரு போராளியை கொச்சைப்படுத்தியதற்கு முதல்வா் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து, மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால், பாமக தொண்டா்களின் உணா்வைக் கட்டுப்படுத்த
முடியாது. தமிழ்நாட்டை இன்று குடிகார நாடாக, கஞ்சா நாடாக மாற்றியதுதான் திராவிட மாடல். ஊழலில் ஊறியுள்ள தமிழ்நாடுய முன்னேற்றம் இல்லாமல் உள்ளது. ஆனால், இவா்கள் வசனம் பேசிக் கொண்டிருக்கிறாா்கள். முதல்வா் பதவியில் உள்ள ஸ்டாலின் பக்குவமாக இருக்க வேண்டும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.