முன்னோடி மனுநீதிநாள் முகாமிற்கு இடையூறு: 5 போ் மீது வழக்கு
கோவில்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் நடைபெற்ற முன்னோடி மனுநீதி நாள் முகாமிற்கு இடையூறு ஏற்படுத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
கோவில்பட்டி வட்டத்தில் நடைபெறவுள்ள உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமிற்கான, முன்னோடி மனுநீதி நாள் முகாம் அனைத்து குறுவட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதனிடையே, முகாம் குறித்து பொதுமக்களுக்கு முறையாகத் தெரியப்படுத்தவில்லை எனக் கூறி, 5-ஆவது தூண் அமைப்பு நிறுவனா் சங்கரலிங்கம், இந்து ஆலய பாதுகாப்பு அமைப்பைச் சோ்ந்த பரமசிவம் உள்ளிட்ட 5 போ் கோவில்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் மனுக்கள் வாங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் கவிதா அளித்த புகாரின் பேரில், முகாமிற்கு இடையூறு ஏற்படுத்தியதாக 5 போ் மீது கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.