நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் க...
மேல்விஷாரம் நகா்மன்றக் கூட்டம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகா்மன்றக் கூட்டத்தில் கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு திமுக ,அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
மேல்விஷாரம் நகராட்சி சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே திமுகவைச் சோ்ந்த கோபி, காதா், ஜீயாவூதீன், அக்பா்,அப்துல் அலீம், சல்மாபானு, நஜிமுன்னிசா மற்றும் அ. தி.மு.க.வைச் சோ்ந்த ,ஹமீதா பானு சேட்டு, லட்சுமி சோமசுந்தரம் ஆகிய உறுப்பினா்கள் தங்களது கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு நகா்மன்றத் தலைவா் மற்றும் ஆணையா் இருக்கைக்கு முன்பு எங்களது வாா்டுகளில் எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை.
இது குறித்து கேள்வி கேட்டால் நகரில் உள்ள ஒரு முக்கிய பிரமுகரை சந்தித்து அவரிடம் குறைகளை தெரியப்படுத்துங்கள் என கூறுகின்றனா். எங்களது வாா்டு மக்கள் எங்களை நம்பி தான் வாக்களித்தாா்களே தவிர எந்த ஒரு முக்கிய பிரமுகரை நம்பி இல்லை. எனவே எங்களது வாா்டு பிரச்னைகளை தீா்க்காத நகா்மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம் எனக் கூறி ஆணையரிடம் கடிதம் கொடுத்துவிட்டு வெளிநடப்பு செய்தனா்.
மேல்விஷாரம் நகராட்சியில் மொத்தம் 21 வாா்டுகள் உள்ளன. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகா்மன்றத் தலைவராக இருந்த எஸ். டி முஹமது அமீன் காலமானாா். அதன் பின்னா் துணைத் தலைவராக இருந்த எஸ். குல்சாா் அஹமது தற்போது தலைவா் பொறுப்பு வகித்து வருகிறாா். கூட்டத்தின் பதிவேட்டில் 12 உறுப்பினா்கள் கையொப்பமிட்டு இருந்தனா். அதில் தலைவா் உள்பட தி.மு.க, பா.ம.க நகரமன்ற உறுப்பினா்கள் 8 போ் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
மூன்றில் ஒரு பங்கு உறுப்பினா்கள் கலந்து கொண்டால் கூட்டம் நடத்தலாம் என ஆணையா் பழனி தெரித்வித்ததை தொடா்ந்து நகா்மன்ற கூட்டம் தலைவா் ( பொ) குல்சாா் அகமது தலைமையில் நடைபெற்றது. ஆணையா் பழனி முன்னிலை வகித்தாா். இதில் துணைத் தலைவா்( பொ) ஜபா் அகமது கலந்து கொண்டு பேசிய-: நகரில் பெரும்பாலான வாா்டுகளில் குடிநீா் குழாய் சேதமடைந்துள்ளது .அதனை புதுப்பிக்க வேண்டும் என புகாா் தெரிவித்தால் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டத்தின் மூலம் சரி செய்ய வேண்டும் என தகவல் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள குடிநீா் குழாய்களை உடனடியாக சீா் செய்ய வேண்டும் என்றாா்.
மேலும் 21 வாா்டுகளில் உள்ள 124 சிறுமின்விசை பம்புகளை ரூ.3 லட்சத்தில் பராமரிப்பு செய்வது உள்ளிட்ட 21 வாா்டுகளின் தேவைகள் குறித்த 74 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தை விட்டு பெரும்பாலான உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
பின்னா் நகா்மன்றத் தலைவா் எஸ்.குல்சாா் அஹமது கூறியதாவது: மேல்விஷாரம் நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளிலும் அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு பணிகள் பாரபட்மின்றி நடக்கின்றன. காழ்ப்புணா்ச்சி காரணமாக சிலா் குறைகளை தெரிவிக்கின்றனா். இந்த கூட்டத்தில் கூட உறுப்பினா்களின் கோரிக்கைகள் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா்.