`ரஜினியின் அழைப்பு... போயஸ் கார்டனில் சீமான்.!’ - சந்திப்பின் பின்னணி
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக விமர்சித்துவரும் சூழலில் நடிகர் ரஜினியை சீமான் சந்தித்திருப்பதுதான் தமிழ்நாடு அரசியலில் டிரெண்டிங். ரஜினி - சீமான் சந்திப்பு பின்னணியும் அதன்மீதான அரசியல் விமர்சனங்கள் குறித்து அலசினோம்.
இச்சந்திப்பு குறித்து பேசிய சீமான் `இது அன்பின் நிமித்தமான சந்திப்புதான். இதில் திரையுலகம், அரசியல் குறித்து விவாதித்தோம்” என்றார். சந்திப்பின்போது உடனிருந்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, ``இரண்டு மணி நேரத்துக்கு மேலாக இச்சந்திப்பு நீண்டது. அதில் 45 நிமிடம் ரஜினியும் சீமானும் மட்டும் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டனர்.
தற்கால அரசியல் குறித்தும் அதில் சீமானின் ஆதங்கங்களை பகிர்ந்துக்கொள்ள எல்லாவற்றையும் பொறுமையாக கவனித்தார் ரஜினி” என்றார். இருவரின் சந்திப்பில் விஜய்யின் அரசியல் விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக ரஜினி வட்டாரத்தில் உறுதிபட சொல்கிறார்கள் சிலர்.
விஜய் அரசியல் வருகையை ஆரம்பத்தில் அரவணைத்த சீமான், த.வெ.க-வின் முதல் மாநாட்டில் திராவிடமும் தமிழ்தேசியமும் மண்ணின் இருகண்கள் என அறிவித்ததை தொடர்ந்து சகட்டு மேனிக்கு தாக்கி வருகிறார்கள் நா.த.க-வினர். த.வெ.க VS நா.த.க மோதல் பற்றி எரியும் வேளையில் ரஜினி - சீமான் சந்திப்பு பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
நம்மிடம் பேசியவர்கள் ``விஜய் சீமானை சகப் போட்டியாளராக கருதுவதால் நாம் தமிழர் கட்சிக்கான வாக்கு வங்கியை சேதப்படுத்துமோ என்ற அச்சம் சீமானுக்கு வந்திருக்கிறது. ஆகவே ரஜினியின் ரசிகர்களின் ஆதரவை பெறவே அவரை அரவணைத்திருக்கிறார் என்றும் இந்த சந்திப்புக்கு பின்னால் பா.ஜ.க இருப்பதாகவும் விமர்சிக்கிறது தி.மு.க தரப்பு” என்றனர்.
சந்திப்பு குறித்து விளக்கம் கேட்க நா.த.க பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம் ``சீமானும் ரஜினியும் சந்தித்துக் கொண்டது திட்டமிடப்பட்ட ஒன்றே. கடந்த அக்டோபர் 10-ம் தேதி ரஜினி நடித்த வேட்டையன் படம் வெளியான சமயத்தில் `நான் பேசி வந்த கருத்துகளை திரையில் கண்டதில் பெருமிதம்’ என மூன்று பக்கம் பாராட்டு மடல் எழுதியிருந்தார் சீமான்.
அதன்பிறகு சீமானை தொடர்புகொண்டு ரஜினி நன்றி தெரிவித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். பிறகு, நவம்பர் 8-ம் தேதி சீமானின் பிறந்தநாள் அன்று சந்திக்க விரும்புவதாக சொல்லி இருக்கிறது ரஜினி தரப்பு. பிறந்தநாளன்று இல்லாமல் நவம்பர் 21-ம் தேதி இருவரும் சந்தித்திக் கொண்டனர். விஜய்யை கடுமையாக விமர்சிக்கும் சீமானை அரசியல் நோக்குடன் ரஜினி சந்தித்தார் என்பதில் உண்மையல்ல. விஜய்யை நாங்கள் விமர்சிக்க தொடங்கும் முன்பு ரஜினியிடமிருந்து அழைப்பு வந்தது. இதில் எங்களுக்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை. கடந்த காலங்களில் ரஜினியை கடுமையாக சாடியதற்கு காரணம் அரசியல் நிலைப்பாடுதான் காரணமே அன்றி ரஜினி மீது எப்போதும் எந்த வெறுப்பும் சீமானுக்கு கிடையாது” என்றனர்.
2017 முதல் 2020 வரை ரஜினியை கண்ணாபின்னாவென விமர்சித்த சீமான் இப்போதும் நட்பு பாராட்டுகிறார். அக்டோபர் 27-ம் தேதிவரை நட்பு பாராட்டிய விஜய்யை இப்போது கண்ணாபின்னாவென விமர்சிக்கிறார் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அனல் பறக்கின்றன. அரசியலில் நிரந்த நண்பனும் எதிரியும் இல்லை என்பதற்கு தக்க உதாரணமாக அமைந்திருக்கிறது இந்த சந்திப்பு.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...