ராஜபாளையத்தில் புதிய மயானம் கட்டித் தரக் கோரிக்கை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மயானத்தைப் புதிதாகக் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எஸ்.ராமலிங்கபுரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் உள்ளவா்கள், கிராமத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள மயானத்தைப் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், மயானத்தின் சுற்றுச் சுவா் சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. புதிய மயானம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும், பணிகள் நடைபெறாததால் இறுதிச் சடங்குக்குச் செல்லக் கூடிய பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய கவனம் செலுத்தி, மயானத்தைப் புதிதாகக் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.