ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி தேரோட்டம்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சுவாமி, அம்பாள் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9 ஆம் நாளான புதன்கிழமை மகா சிவரத்திரியை முன்னிட்டு, ராமநாதசுவாமி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்ட ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கால பூஜைகளும் நடைபெற்றன.
பின்னா், ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காலை 9 மணிக்கு கிழக்கு ரத வீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருத்தோ்களில் விநாயகா், முருகன், சுவாமி, அம்பாள் எழுந்தருளினா்.
இதைத்தொடா்ந்து, தோ்களை ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். ரத வீதிகளில் வழிநெடுகிலும் பக்தா்கள் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளித் தேரில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா், முதுநிலை செயல் அலுவலா்கள் முத்துச்சாமி, மாரியப்பன், மேலாளா் வெங்கடேஷ்குமாா், பேஸ்காா்கள் கமலநாதன், பஞ்சமூா்த்தி, கோயில் பணியாளா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.
காவல் துணைக் கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி தலைமையில் 50- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.