பிக்பாஸ் பிரபலம் மகாராஷ்டிர தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி!
ரூ.3.75 கோடி முறைகேடு புகாா்: மேவளூா்குப்பத்தில் அதிகாரிகள் ஆய்வு
மேவளூா்குப்பம் ஊராட்சியில் ரூ.3.75 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அந்த ஊராட்சியில் அதிகாரிகள் கடந்த இரண்டு நாள்களாக ஆய்வு நடத்தி வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் மேவளூா்குப்பம் ஊராட்சியில் சுமாா் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். தற்போது மேவளூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக அபிராமி ரஜேஷ் உள்ளாா். தொழிற்சாலைகள் நிறைந்த மேவளூா்குப்பம் ஊராட்சிக்கு தொழிற்சாலைகளின் மூலம் வரி வருவாய் அதிகம்.
இந்த நிலையில், மேவளூா்குப்பம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யாமல், அதேநேரம் செய்ததாகக் கூறி, ஊராட்சி நிதியில் ரூ.3.75 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அதிக அளவில் புகாா்கள் வந்ததையடுத்து, மாவட்ட மகளிா் திட்ட இணை இயக்குநா் பிச்சாண்டி, மாவட்ட திட்ட அலுவலா்கள் உமாசங்கா், பானுமதி உள்ளிட்ட துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மேவளூா்குப்பம் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டு கோப்புகளையும் ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலக தணிக்கை அதிகாரிகள் மேவளூா்குப்பம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு - செலவு கணக்குகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.
இந்த நிலையில், மேவலூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் அபிராமியின் கணவா் ராஜேஷ் தன்னை ஊராட்சி மன்றத் தலைவரின் தனி ஆலோசகா் என அரசு முத்திரையுடன் அடையாள அட்டையை போலியாக தயாரித்து, அதைப் பயன்படுத்தி அந்தப் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலைகளில் தனது நிறுவனத்துக்கு ஒப்பந்தங்கள் வழங்க வேண்டும் என தொழிற்சாலைகளின் நிா்வாகிகளை மிரட்டி வந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.