கல்வி நிறுவனங்களின் பெயர்களில் சாதியப் பாகுபாடு: வழக்கில் ஒருவார கால அவகாசம் அளி...
ரூ.75 லட்சம் கடன்.. 5 கொலைகள்.. 23 வயது இளைஞன் கொலைகாரனாக மாறியது ஏன்?
அளவுக்கு மீறிய கடனில் சிக்கிய இளைஞர் ஒருவர் 6 பேரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலி உள்பட தனது சொந்த குடும்பத்தினர் 6 பேரை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தனது குடும்பத்தைச் சார்ந்த 6 பேரை கொலை செய்தாகக் கூறி விஷம் அருந்திய நிலையில் நேற்றுமுன்தினம்(பிப்.25) இரவு காவல் நிலையத்தில் சரணடைந்த வெஞ்சாரமூடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஃபான் (23).
விஷம் குடித்தபடி காவல் நிலையத்துக்கு சென்ற அஃபான் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை கொலை செய்ததாகக் கூறியுள்ளார். இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் உடனடியாக அஃபானை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் சொன்ன இடங்களில் சென்று விசாரித்த போது அவரின் சகோதரன் அஃப்சான் (13), பாட்டி சல்மா பீவி (88), அஃபானின் காதலி ஃபர்சானா (19), அவரது பெரியப்பா லத்தீஃப் (69), பெரியம்மா ஷாஹிதா (59) என மொத்தம் 5 பேரை வெவ்வேறு இடங்களில் வைத்து கொலை செய்துள்ளார். பலத்த காயமடைந்த அஃபானின் தாயார் ஷெமி(47) மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
பரபரப்பு வாக்குமூலம்
யார் இந்த அஃபான்? ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்தது ஏன்? என்று கேரள காவல் துறையினர் துப்புதுலக்கினர். விஷம் குடித்த அஃபானை மருத்துவமனையில் அனுமதித்த காவல் துறையினர், அவர் கொலை செய்தது ஏன்? மற்றும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், அஃபான் தந்தை பல ஆண்டுகளாக துபையில் தொழில் செய்து வந்ததாகவும் சில ஆண்டுகளுக்கு முன் அஃபானும் துபையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களது குடும்பத்தினர் ஆடம்பரமாக வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் அதன்பின்னர் தொழில் நஷ்டம் ஏற்பட்டு அதனை சரிகட்ட அதிகளவில் கடன் வாங்கிதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவரது தாயார் ஷெமியும் அவர்களது வீட்டை அடமானம் வைத்து கடனை அடைத்துள்ளார்.
கடன் கட்டமுடியாத நிலையில் அவரது வீட்டை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்த நிலையில், மொத்தக் கடன் ரூ.75 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால், வெவ்வேறு 4 நபர்களிடம் தலா ரூ.10 லட்சம் கடன் பெற்றிருந்த அஃபான், ஒருநாளைக்கு தலா ரூ.10,000 செலுத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட ஃபர்சானாவின் சகோதரர், அவரது குடும்பத்தினர் அஃபானுக்கு ஃபர்சானாவை திருமணம் செய்துவைக்க சம்மதம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “கடன் பிரச்னை அதிகரித்ததால் பாதிக்கப்பட்டிருந்த அஃபான் சில நாள்களாக மனநிலை சரி இல்லாமல் இருந்ததாகவும் அவருடைய நடவடிக்கைகள் மாறுபட்டு காணப்பட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், டார்க் வெப் என்னும் சட்டவிரோத இணையத்தில் கொலைகள் செய்வது குறித்து தெரிந்துகொண்டிருக்கிறார்.
கொலை செய்தவர் போதைக்கு அடிமையானவரோ அல்லது ரௌடிசம் செய்யக்கூடியவரோ இல்லை. மேலும், அவரால் கொலை செய்யப்பட்டவர்கள் அவருக்கு எதிரியும் இல்லை. ஆனாலும், இவ்வாறான கொடூரமான சம்பவத்துக்கு காரணமாகியுள்ளது. அவரின் கொலைக்கு நிதி நெருக்கடி மட்டுமே முதன்மைக் காரணமாக இருக்கிறது. அவரின் சமூக வலைதளங்களையும் ஆய்வு செய்து வருகிறோம்.
தனது தாயை கொலை செய்யமுயன்ற பின்னர் வெஞ்சரமூடுவில் உள்ள மதுபானக் கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு ஒரு மதுப்புட்டி ஒன்றையும் வாங்கியுள்ளார். 10 நிமிடங்கள் அங்கிருந்தவர் அதன்பின்னர் அவரது பாட்டி சல்மா வீட்டுக்குச் சென்று அவரைக் கொன்று அவரின் தங்கச் சங்கிலியை எடுத்துக் கொண்டு அதை அடகு வைத்துள்ளார்.
ரூ.74,000 -க்கு அடகு வைத்து அதில் ரூ.38,000-த்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார். அந்தப் பணத்தில் தலா ரூ.2500 வீதம் 4 பேருக்கு ஜிபே மூலம் அனுப்பியுள்ளார். அதன்பின்னர் அவரது தந்தையின் அண்ணன் அப்துல் லத்தீப் வீட்டுக்குச் சென்று அவரையும் அவரது மனைவியும் கொலை செய்துள்ளார். அதன்பின் காதலியையும் தனது தம்பியையும் கொன்றுவிட்டு எலிமருந்து தின்றபின்னர் காவல் நிலையத்துக்குச் சென்று ஆஜராகியுள்ளார்.
காதலி உள்பட குடும்பத்தினர்களை கொலை செய்த சம்பவம் கேரளத்தில் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.