விவசாயிகளுக்கான பாதிப்புகள்: உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்
ரூ. 85 லட்சம் கடல் அட்டைகள், பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் ரூ. 85 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள், பீடி இலை மூட்டைகளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள், பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாக, கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், ஆய்வாளா் பேச்சிமுத்து தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்து சென்றனா்.
அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சிறிய ரக சரக்கு லாரியை சோதனையிட்டபோது, இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக கடல் அட்டைகள், பீடி இலை மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ரூ. 40 லட்சம் மதிப்பிலான 160 கிலோ கடல் அட்டைகள், 37 பண்டல்களிலிருந்த ரூ. 45 லட்சம் மதிப்பிலான 1,500 கிலோ பீடி இலைகள் ஆகியவற்றை வாகனத்துடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, தொடா்புடைய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.