சென்னை கடற்கரைச் சாலை - ஓ.எம்.ஆரில் நாளை பொது போக்குவரத்து நிறுத்தம்
லாஃப்ரா யாழினி ஐபிஎஸ் –அத்தியாயம் 2 | தொடர்கதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
லாஃப்ரா தனது பயிற்சியின் பொழுது தான் கற்றது அனைத்தையும் மீண்டும் கண் முன் கொணர்ந்தாள்.
ஜொகிந்தர் சிங், பயிற்சியாளர், அந்த குழுவின் முன் அந்த கேள்வியை வைத்தார்,” ஒரு குற்றம் நடந்ததென்றால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?”
இந்தியா முழுதும் பயிற்சியின் பின் அலுவல் நிமித்தம் பரவப்போகும் அந்த இளம் அதிகாரிகள் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தனர்.
”தடய ஆதாரங்கள்” என்றான் ராம்சரண்
“விளக்குங்கள் ராம்” என்றார் ஜொகி. ஜொகிந்தர் சிங்கை அனைவரும் ஜொகி என்றே அழைப்பார்கள்.” ஒவ்வொருவரும் செய்ய வேண்டியதை சொல்லி அதை இரண்டு மூன்று வாக்கியங்களில் விளக்க வேண்டும். என் வேலைப்பளு சற்று குறையுமல்லவா?” என்றார் ஜொகி.
வகுப்பில் ஒரு சிரிப்பலை எழுந்து அடங்கியது.
ராம் தொடர்ந்தான், ”எந்த ஒரு புத்திசாலி குற்றவாளியும், ஏதாவது ஒரு தடயத்தை விட்டுப்போவான் என்பது எழுதப்படாத நியதி”
“ஹாலிவுட் படங்கள் அதிகம் பார்ப்பதை குறை ராம்” என்றார் ஜொகி. மீண்டும் ஒரு சிரிப்பலை வகுப்பில் எழுந்து அடங்கியது.
ராம் தொடர்ந்தான், ”கை ரேகைகள், ரத்தம், முடி, நகம் போன்ற டி.என்.ஏ தடயங்கள் மற்றும் குற்றம் நடைபெற்ற இடத்தில் இருந்து கிடைக்கக்கூடிய மற்ற தடயங்கள் நமக்கு குற்றவாளியை அருகில் கொணரக் கூடியவை”
அஷோக் எழுந்தான், ”கண்காணிப்பு காமிராக்கள்”
”உட்கார் அஷோக்” இடைமறித்தார் ஜொகி, ”அதாவது குற்றம் நடைபெற்ற இடம் மற்றும் அருகில் இருந்து கிடைக்கக் கூடிய சிசிடிவி காட்சிகள்”
லாஃப்ரா எழுந்தாள், ``சாட்சிகளின் விசாரணை” நடைபெற்ற குற்றம் பற்றி குற்றம் நடைபெற்ற இடத்தில் மற்றும் அவ்விடத்தின் அருகில் சந்தேகப்படும் படி ஏதேனும் பார்த்த அல்லது கேட்டிருந்த சாட்சிகளின் விசாரணை”
லாஃப்ரா, ஜொகியின் நீலகண் கொண்ட மாணவி. ”வெல்டன் லாஃப்ரா” என்றார் ஜொகி. “மேலும் மேலும், சீக்கிரமாக. நீங்கள் இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டால், குற்றவாளி நேபாள் போயிருப்பான்”
லாஃப்ரா, தன் கையை உயர்த்தினாள், ”வா.வா. எனதருமை பெண்ணே. சீக்கிரம். குற்றவாளி கோரக்பூர் போய்விட்டான்” கோரக்பூர், இந்திய நகரை கடந்துவிட்டால் நேபாள் எல்லை என்று அனைவரும் அறிந்திருந்தனர்.
“ரகசிய இன்ஃபார்மர்களுடன் மற்றும் மற்ற சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்களுடன் கை கோத்து கொள்ளுதல். இதே போன்ற குற்றங்களை செய்யும் குற்றவாளி குழுமங்களை வளைத்துப்போடுதல்”
“மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடு லாஃப்ரா” என்றார் ஜொகி.
சுஜீத் எழுந்தான், ”சமூக வலைதளங்கள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்களின் பதிவுகள். இவற்றின் மூலம் சந்தேகத்தை மூட்டக்கூடிய அழைப்புகள், குறுந்தகவல்களை அடையலாம்”
ஜொகி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார், ``அனைவரும் உங்கள் கைதட்டல்களை சுஜீத்துக்கு கொடுங்கள்”
“எங்கள் வேலை முடிந்தது மேடம்” ஃபோரன்சிக் டீமின் அறிவிப்பு லாஃப்ராவை தன்னிலைக்கு கொண்டுவந்தது.
“ஏதாவது கிடைத்ததா, தியாகு?” லாஃப்ரா, ஃபோரன்சிக் நிபுணன் தியாகுவை விசாரித்தாள்.
இன்ஸ்பெக்டர் அபி, லாஃப்ராவிடம் வந்து நின்றாள்.”என்ன அபி?”
“மேடம், ரியா தன்னை விடுவிக்குமாறு கேட்கிறாள்.
“இன்னும் விசாரணை ஆரம்பமே ஆகவில்லை. ஒரு அறையில் சற்று ஓய்வெடுக்க சொல்லுங்கள். அப்படியே நம் வழக்கமான வேலைகளை ஆரம்பிக்கலாம், அபி”
தியாகு, லாஃப்ராவிடம் கேட்டான், ``மேடம், ஆஃப் த ரெகார்டா, ஆன் ரெகார்டா?”
லாஃப்ரா தன் மயக்கும் புன்முறுவலை தியாகுவிற்கு பரிசாக தந்து ஒரு இனிப்பு மிட்டாய் கடையின் மொத்த உருவமாகிச் சொன்னாள்,”தியாகு, எனக்கு தெரியாதா உன்னைப் பற்றி. முதல் தகவல் கொடுங்கள் போதும்”
“லாஃப்ரா, நீ என் வீட்டிற்கு இரவு உணவிற்கு வருவேன் என்று சத்தியம் செய். சொல்கிறேன்” என்றான் தியாகு.
”சத்தியமாக வருகிறேன்”
“அப்படியானால் சரி. இது ஒரு நன்கு அரங்கேற்றப்பட்டுள்ள ஆள் கடத்தல். நாம் பார்க்கும் இந்த அறை கந்தர்கோளமாய் இருந்தாலும் யாரும் யாரையும் வலுக்கட்டாயம் செய்து கடத்தவில்லை”
“அப்படி என்றால்….” லாஃப்ரா தியாகுவை சிந்தனையுடன் பார்த்தாள்.
“அது உன் வேலை லாஃப்ரா” என்று சொல்லி தியாகு தன் கடையை மூடினான்.
தியாகு சென்றவுடன் இன்ஸ்பெக்டர் அபி, லாஃப்ராவிடம், ”மேடம். தியாகு ஏற்கனவே கல்யாணமானவன். அவனுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்”
லாஃப்ரா அபியிடம் சொன்னாள், ”நான்,தியாகு வீட்டிற்கு தனியாக வருகிறேன் என்று சத்தியம் செய்தேனா”
“அப்படி என்றால் மேடம்?”
நாம் இருவரும் சேர்ந்து தான் அவன் வீட்டிற்கு இரவு உணவிற்குப் போவோம்” என்றாள் லாஃப்ரா..
லாஃப்ராவுக்கு கமிஷனரிடம் இருந்து மொபைல் அழைப்பு வந்தது.
“லாஃப்ரா, என்ன நிலையில் உள்ளது உன் விசாரணை?”
“ஃபோரன்சிக் ஆய்வு முடிந்தது சார். ஒரு ரான்சம் நோட் கிடைத்திருக்கிறது”
“எவ்வளவு கேட்டு”
“பத்து சி”
“என் கடவுளே, மறுபடி சொல். என் காதுகள் சரியாக கேட்கவில்லையா அல்லது என்னை ஏமாற்றுகின்றனவா.”
ஒரு நிமிட இடைவெளி விழுந்தது. தன் எதிரில் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி டம்ளரில் இருந்து கமிஷனர் தண்ணீர் சிறிது குடிப்பது லாஃப்ராவின் கண்களில் தெரிந்தது.
“இன்னும் ஒரு வாரம். நிம்மதியாய் ஓய்வில் போய் விடலாம் என்றால் முடியாது போலிருக்கிறதே”
கமிஷனர் தொடர்ந்தார் “நமக்கு தகவல் தெரிவித்த பெண்”
“உட்கார வைத்திருக்கிறேன் சார். வீட்டிற்கு போகவிடுங்கள் என்று அழுகிறாள். ரியா என்று பெயர்”
“பெரிய இடம் லாஃப்ரா. பார்த்து ஹாண்டில் செய். உனக்கு தெரியாததா என்ன. டீம் அமைத்துவிட்டாயா?’
“இப்போதைக்கு அபி, கருணாகரன் நான் மூவரும் இருக்கிறோம் சார். சின்ன டீமே ஃபார்ம் பண்ணப்போகிறேன் சார்”
“லாஃப்ரா, நான் ஏன் இன்னும் உன்னை குற்றப் பிரிவில் வைத்திருக்கிறேன் என்றால் எனக்கு உன் மேல் முழு நம்பிக்கை இருக்கிறது. முதல் அமைச்சர் இன்னும் ஏன் என்னை கமிஷனராக வைத்திருக்கிறார் என்றால் அவருக்கு என் மேல் சிறிது நம்பிக்கை இருக்கிறது. நாம் இருவரும் அந்த நம்பிக்கைக்கு உரியவர்களா என்று நிரூபணம் செய்ய வேண்டிய தருணம் இது” சிறிது இடைவெளி விழுந்தது. கமிஷனர் தண்ணீர் குடிக்கிறார். லாஃப்ரா காத்திருந்தாள்.
கமிஷனர் தொடர்ந்தார், ``லாஃப்ரா, நேரம் கம்மியாக இருக்கிறது. தாமோதரன், ரூபாவின் அப்பா, தேர்தல் வேலையாக சேலம் சென்றிருப்பதால் நாம் சிறிது மூச்சு விட முடிகிறது. அவன் வந்து விட்டால் என்னை உண்டு இல்லை என்று பண்ணி விடுவான்”
”சீ.எம்மிடம் ஒரு வார்த்தை சொல்லிவைக்கலாமா சார்?”
“லாஃப்ரா, என் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன். தாமு எதிர்க்கட்சி ஆள். இது முதல் அமைச்சர் காதுக்கு போகும் முன் இந்த கேசை நீ முடித்திருக்க வேண்டும்”
“கட்டாயம் சார், ஊடகங்கள்?”
“எங்கள் பக்கம் இருந்து செய்தி லீக் ஆகாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். ஆல் த பெஸ்ட். கீப் மீ அப்டேட்டட்”
“தாங்க் யூ சார். கட்டாயம் சார்” என்று கூறி இணைப்பு துண்டிக்கப்பட்ட மொபைலை ஒரு நிமிடம் பார்த்தாள் லாஃப்ரா.
’எங்கிருந்து துவங்குவது? எங்கிருந்து துவங்குவது?’ லாஃப்ரா தன் புருவத்தை தேய்த்து விட்டுக் கொண்டு ஒரு நிமிடம் யோசித்தாள்.
“அபி” என்று ரியாவுடன் அறையில் இருந்த இன்ஸ்பெக்டரை அழைத்தாள் லாஃப்ரா.
“எஸ் மேடம்” என்று வந்து நின்ற அபியை ஒரு கணம் நோக்கிய லாஃப்ரா, “அபி, கூட்டாஞ்சோறு சமைத்துவிடுவோமா?" என்றாள்
“கட்டாயம் மேடம்” அவர்கள் பாஷையில் கூட்டாஞ்சோறு சமைப்பது என்றால் அனைத்து விசாரணை முறைகளையும் ஒரே நேரத்தில் கலந்து ஒரு கை பார்ப்பது.
“கருணாகரன் வந்தாச்சா அபி?” என்று கேட்டாள் லாஃப்ரா.
“ எஸ் மேடம்”
”நல்லது. கருணாவை கூப்பிடு” என்று கூறிய லாஃப்ரா, ரியா இருந்த அறை தவிர்த்து மற்றொரு அறைக்கு சென்றாள்.
அந்த அறையில் ஒரு பெண்ணும் ஒரு பையனும் இருந்தனர்.
“பையன் பிகாரி மேடம். ஒரு தட்டு தட்டுவோமா” என்ற அபியை கையசைத்து அடக்கிய லாஃப்ரா, அடுத்த அறைக்குள் நுழைந்தாள்.
லாஃப்ராவை பின் தொடர்ந்து அபியும் கருணாகரனும் அந்த அறையுள் நுழைந்தனர்.
”கருணா, சிசிடிவியை பார்த்துவிடுங்கள்”
“பார்த்துவிட்டேன் மேடம். ஒரு வாரமாக வேலை பார்க்கவில்லை. அப்பார்ட்மெண்ட் செக்ரட்டரி சிசிடிவி கம்பெனிக்கு புகார் அளித்திருக்கிறார். கடித நகலை காண்பிக்கிறார்”
”அக்கம் பக்கத்தில் இருக்கும் சிசிடிவி பாருங்கள். அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டியை விசாரியுங்கள். தேவைப்பட்ட அழுத்தம் கொடுத்து விசாரியுங்கள். உடைந்துவிடாத அளவுக்கு. உங்கள் அறிக்கையை எதிர்பார்க்கிறேன், அடுத்த முப்பது நிமிடங்களுக்குள்”
கருணா, அறையை விட்டு நகர்ந்தான்.
“அபி, அந்த வேலையாட்கள் இருவரையும் விசாரி. நான், சைபர் செல்லுடன் தொடர்பு கொண்டு உதவி கேட்கிறேன். ஆனந்தை, சென்னையில் ஆள் கடத்தலில் ஈடுபடும் கும்பல்களை வளைக்க சொல்கிறேன்” ஆனந்த் ஒரு துடிப்பான வளர்ந்து வரும் சப் இன்ஸ்பெக்டர்.
சைபர் செல் உடனே உதவ ஒத்துக்கொண்டது. ரூபாவின் மொபைல் தொடர்பு விட்டுப் போயிருந்தது. சிம் ட்ராக் செய்தால் அவள் குடியிருப்பையே காண்பித்தது.
“ரூபாவிற்கு வந்த கடைசி அழைப்பு ரியாவிடம் இருந்தே வந்திருக்கிறது”
”ரியாவின் ஒரு வார அழைப்புகளின் பட்டியல் வேண்டுமே”
“கிடைக்கும் மேடம்”
”தாமோதரனின் மொபைல் லாக்…”
“கிடைக்கும் மேடம், ஆனால் தாமோதரன் ஒரு அரசியல்வாதி. தகுந்த அதிகார ஒப்புதல்கள் இருந்தால்”
“முதல் அமைச்சர் ஒப்புதல் போதுமா?”
‘சில வேளைகளில் காவல் அதிகாரிகளிடமே பொய் சொல்லி வேலை வாங்க வேண்டி இருக்கிறது’. லாஃப்ரா தனக்குள் எண்ணிக் கொண்டாள்.
“பரவாயில்லை மேடம். ஏற்பாடுகள் செய்கிறோம்”
“தாமோதரின் மொபைல் ரெக்கார்ட் எனக்கு தேவை. அதுவும் சீக்கிரமாக தேவை”
ரியா இருந்த அறைக்குள் நுழைந்தாள் லாஃப்ரா.
“ரியா உன் தைரியத்தை பாராட்டுகிறேன், ரூபா காணாமல் போனதை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு”
“நன்றி மேடம். என் வீட்டில் என்னை தேடுவார்கள். என்னை விட்டு விடுங்கள் மேடம்”
“விட்டு விடுகிறேன் உன் முழு ஒத்துழைப்பையும் தந்தால்”
“கட்டாயம் தருவேன் மேடம்” என்றாள் ரியா.
“ரூபாவின் நண்பர்களில் சந்தேகத்துக்கு இடமானவர்கள்?”
“யாரும் இல்லை மேடம். எல்லொரும் பெரிய இடத்து பையன்களும் பெண்களும் தான்”
‘அது தான் என் தலைவலியே’ தனக்குள் எண்ணிக் கொண்டாள் லாஃப்ரா.
அடுத்த முப்பது நிமிடத்தில் லாஃப்ராவின் தலைமையில் முதல் ப்ரெய்ன் ஸ்டார்மிங் கூட்டம் குழுமியது.
”கருணா உன் கண்டுபிடிப்புகள்?”
“பக்கத்து பில்டிங் சிசிடிவி-படி ரூபா எப்பொழுதும் போல் தான் வீட்டை விட்டு ஆக்டிவாவில் கிளம்பி இருக்கிறாள் மேடம்”
”நேரம் கவனித்தாயா?
“மதியம் ஒரு மணி மேடம்”
“தனியாகவா?”
“ஆமாம்”
“வண்டி எண்ணை குறித்தாச்சா?"
“குறித்துக் கொண்டேன் மேடம். மேலும் உங்கள் அனுமதி வாங்காமலேயே போக்குவரத்து கண்ட்ரோலுக்கும் அனுப்பி விட்டேன்”
“நல்ல காரியம் செய்தீர்கள் கருணா. நேரம் மிச்சப் படும்”
”இந்த அப்பார்ட்மெண்ட் பாதுகாவலர்களை விசாரித்தீர்களா?”
“இருவரும் அறுபது வயதை கடந்தவர்கள் மேடம். ஒரு ஆளால் நிற்கவே முடியவில்லை”
“நம்பிக்கைக்குரியவர்களா?”
”நம்பிக்கைக்கு உரியவர்கள் தான் என்று சொசைட்டி செக்ரட்டரி சொல்கிறார். ஆனால் செய்யும் வேலைக்கு உகந்தவர்களா, என்பது சந்தேகமே”
அபி இடைமறித்தாள்,” மேடம் ஒன்று செய்து பார்க்கலாம். எஸ்.ஐ. ஆனந்த் வரும்பொழுது இனிப்பு கொடுத்து முயன்று பார்ப்போம்”
“தியாகு சொன்னது சரி தான். நம்மை திசை திருப்பவே வீட்டினுள் சுனாமி வந்தது போன்ற ஏற்பாடு. அந்த ரான்சம் நோட் எப்படி உள்ளே வந்தது. உதைக்குதே” “வேலை ஆட்கள் அபி?”
“அந்த பெண் வீட்டை சுத்தம் செய்து மற்ற மேல் வேலைகளை கவனித்துக் கொள்பவள். காலை ஒரு வேளை. மாலை ஒரு வேளை வருபவள். பத்து வருட நன்னடத்தை ரெக்கார்ட் காண்பிக்கிறாள் மேடம்”
அபி தொடர்ந்தாள், ”அந்த பிகாரி, சமையல் வேலைக்கு என்று வந்திருக்கிறான். வேறு என்னென்ன வேலைகள் செய்தானோ தெரியவில்லை மேடம். முதல் சந்தேகம் அவன் மேல் தான் விழுகிறது”
“அவர்கள் இருவரின் மொபைல் எண்?"
“வாங்கிவிட்டேன் மேடம். நீங்கள் சரி என்றால் சைபருக்கு அனுப்பிவிடுகிறேன்”
“அதை செய் முதலில்” என்ற லாஃப்ரா, அபியிடம் தொடர்ந்தாள், ”ஆனந்தின் முன்னேற்றம் என்ன என்று அப்படியே தெரிந்துகொள். அவனை அப்படியே சைபர் அறிக்கைகள் வாங்கிக் கொண்டு இங்கே வரச் சொல்”
“கருணா, ரியாவை கூப்பிடுங்கள்” என்று பணித்தாள்.
“ரியா, ரூபாவின் மொபைலை பார்த்தாயா?”
“ரூபா, அடிக்கடி போனை வீட்டிலேயே வைத்துவிட்டு போய்விடுவாள் மேடம். அவள் தந்தை தொந்தரவு வேறு”
உண்மை தான் சொல்கிறாள்.
“ரியா, ரூபா படிப்பில் எப்படி?”
“சுமார் ரகம் தான். கடைசி பெஞ்சில் அமர்பவள்”
“நெருக்கமான ஆண் நண்பர்கள்?”
“அதி நெருக்கம் என்று யாரும் இல்லை மேடம். அவள் அப்பா மேல் மிகுந்த பயம்”
” இங்கு நடந்தது பற்றி யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம்”
“மாட்டேன் மேடம்”
”சரி ரியா. நீ இப்போதைக்கு போகலாம். ஊரை விட்டு போய் விடாதே. எப்பொழுது வேண்டுமானாலும் அழைப்போம்.உன் தங்குமிட முகவரி கொடுத்து செல்.” என்று ரியாவை விடுவித்தாள் லாஃப்ரா.
“லொக்கேஷன் பகிர்வு செய்யட்டுமா, மேடம்?” என்ற ரியாவிடம் லாஃப்ரா சொன்னாள்,”இல்லை, ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்து விடு”
ரியா, புத்தகங்கள் இருந்த அறையில் இருந்து ஒரு நோட் எடுத்து வந்து அதில் இருந்து ஒரு பக்கம் கிழித்து அதில் தன் முகவரியை எழுதிக் கொடுத்தாள்.
“இந்த நோட்புத்தகம் யாருடையது?”
“ரூபாவுடையது தான் மேடம்”
“எப்படி வீடு செல்வாய்? எங்கே உன் வீடு “
“சாதாரணமாக ஆக்டிவாவில் தான் போவேன், வருவேன் மேடம். இப்போது தேர்தல் நேரமாய் இருப்பதால் ஆட்டோவில் தான் போவதும் வருவதும்”
அந்த காகிதம் பார்த்த அபி சொன்னாள்,” மைலாப்பூரில் ஒரு பிரபலமான அடுக்கு மாடி கட்டிடத்தில் வீடு இருக்கிறது மேடம்”
ரியா வெளியில் கிளம்பியவுடன் லாஃப்ரா அபியிடம் சொன்னாள்,” இந்த காகிதத்தை தியாகுவிற்கு அனுப்பி விடு. ரியாவின் மொபைலை தொடர்ந்து பின்பற்றுமாறு பார்த்துக் கொள் அபி”
ரியா விட்டுச்சென்ற நோட்டை திறந்து பார்த்தாள் லாஃப்ரா. கர்சிவ் எழுத்துக்கள் எழுதிப் பழகிய நோட் அது. அந்த நோட் புத்தகத்தில் இருந்து ஒரு பக்கத்தை கிழித்த லாஃப்ரா, அபியிடம் கொடுத்து,” இதையும் தியாகுவிடம் சேர்த்துவிடு அபி” என்றாள்.
“மேடம் உங்கள் டிரைவரிடம் கொடுத்து அனுப்பட்டுமா?” என்ற அபியிடம்,
“அனுப்பு. டிரைவர் திரும்பி வரும் வரை இந்த வீட்டையே நம் விசாரணைக்கூடமாக வைத்துக் கொள்வோம்” என்றாள்.
மொபைலில் அந்த முகவரியை படம் பிடித்துக்கொண்டு ஒரு பிளாஸ்டிக் பையில் அதை இட்டு டிரைவரிடம் அதை கொடுத்து தியாகுவிடம் சேர்ப்பிக்குமாறு உத்தரவிட்டாள்.
“அந்த வேலையாட்கள் இருவரும் இருக்கட்டும். ஆனந்தை சீக்கிரம் வரச்சொல்லுங்கள். ஆனந்த் வந்ததும் நம் இரண்டாவது மீட்டிங் ”
லாஃப்ரா, அபி, கருணா இரண்டாவது ப்ரெயின் ஸ்டார்மிங் மீட்டிங்கிற்கு ஆனந்தின் வருகை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
தொடரும்,
அன்புடன்,
மீரா போனோ
(எஃப்.எம்.பொனவெஞ்சர்)
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...