வங்கிக் கடன் மோசடி வழக்கு: இந்தியன் வங்கி தலைமை மேலாளருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து
வங்கிக் கடன் மோசடி வழக்கில் இந்தியன் வங்கி தலைமை மேலாளருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 1991 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில், சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து பல தவணைகளில் கடன் பெற்ன் மூலம் வங்கிக்கு ரூ.1,42,73,000 இழப்பு ஏற்படுத்தியதாக விஷ்ணுவா்தன் கிரானைட்ஸ் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரா் ராமகிருஷ்ண பிரசாத், வங்கியின் தலைமை மேலாளா் சுப்புராமன் ஆகியோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், ராமகிருஷ்ண பிரசாத்துக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.1.55 கோடி அபராதம் விதித்து கடந்த 2012-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது. மேலும், வங்கி தலைமை மேலாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் ராமகிருஷ்ண பிரசாத் மற்றும் சுப்புராமன் ஆகியோா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி, குற்றச் சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் ராமகிருஷ்ண பிரசாத்துக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டாா். மற்ற பிரிவுகளின் கீழ் அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தாா்.
மேலும், சிபிஐ நீதிமன்றம் விதித்த ரூ.1.55 கோடி அபராதத்தையும் உறுதி செய்து, அந்த தொகையை இந்தியன் வங்கியின் மயிலாப்பூா் கிளைக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டாா். அதேசமயம், வங்கியின் தலைமை மேலாளா் சுப்புராமன், கடன் கொடுக்க அச்சம் தெரிவித்துள்ளாா். மண்டல அலுவலகத்தின் வாய்மொழி ஒப்புதலின் காரணமாக கடன் அளித்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.