செய்திகள் :

வன்னியர் இட ஒதுக்கீடு கோரி டிச.24 இல் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

post image

சமூகநீதிக்காக குரல் கொடுத்த தந்தைப் பெரியாரின் நினைவு நாளான வரும் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டத் தலைநகரங்களிலும் பாமக சார்பில் மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை; உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து டிசம்பர் 24 ஆம் தேதியுடன் 1000 நாள்கள் ஆகின்றன. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இப்போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று அறிவித்து பெருந்துரோகம் இழைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு; போதிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்கத் தீரப்பை கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாள் வழங்கியது.

அதன்பின் நேரடியாக சந்திப்பு, மனுக்கள், கடிதம், சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுடன் கலந்தாய்வு என நூற்றுக்கும் மேற்பட்ட முறை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டியதன் தேவையை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. இவை அனைத்தையும் கடந்த கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் நாள் முதல்வரை சந்தித்த நான், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினேன். ஆனால், அவை அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராகிவிட்டன.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிந்தைய சில மாதங்களில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கண்டிப்பாக வழங்கப்படும் என்று சட்டப் பேரவையிலேயே முதல்வர் அறிவித்தார். தேவைப்பட்டால், வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்கும் தயாராக இருக்கிறேன் என்று அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக குழுவினரிடம் வாக்குறுதி அளித்தார். ஆனால், இப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மாற்றிப் பேசுகிறார். அப்படியென்றால், உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்குங்கள் என்று கேட்டால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை; மத்திய அரசுக்குத் தான் அந்த அதிகாரம் உள்ளது என்று கூறி தட்டிக்கழிக்கிறார்.

2008 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட அனைத்து வகையாக தரவு சேகரிப்புகளையும் செய்யலாம் என்று பல மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் கூறியிருக்கின்றன. அந்தச் சட்டத்தின்படி கர்நாடகம், பிகார், ஒடிசா, ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை; மத்திய அரசுக்கு தான் அந்த அதிகாரம் உண்டு என்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருவதைப் பார்க்கும் போது, அவருக்கு சமூகநீதியின் அடிப்படைக் கூட தெரியவில்லை; அல்லது, சமூகநீதிக்கு எதிரான சக்திகளின் கைப்பாவையாக மாறிவிட்டார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

இதையும் படிக்க |திருவண்ணாமலை தீபம்: மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை -தமிழக அரசு

தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள சமூகம் என்றால் அது வன்னியர்கள் தான். அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது தான் சமூகநீதியின் அடிப்படை ஆகும். ஆனால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று இல்லாத காரணங்களைக் கூறி ஓர் அரசு மறுக்கிறது என்றால், அந்த அரசை நடத்துபவர்கள் வன்னிய மக்கள் மீது எந்த அளவுக்கு வன்மம் கொண்டிருப்பர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது; மக்களும் இதை புரிந்து கொண்டுள்ளனர்.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததன் 1000 ஆம் நாள் வரும் 24 ஆம் நாள் வருகிறது. அன்று தான் சமூகநீதிக்காக குரல் கொடுத்த தந்தைப் பெரியாரின் நினைவு நாள். அந்த நாளில், அதாவது வரும் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டத் தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் நாள் வன்னிய மக்கள் தொடங்கிய போராட்டம் தான் 21 இன்னுயிர்களை இழந்தாலும் கூட, 20 சதவிகித இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுத்தது. இப்போது அவரது நினைவு நாளில் தொடங்கும் அடுத்தக்கட்ட போராட்டமும் வெற்றியில் தான் முடியும்; வன்னியர் சமூகத்திற்கு சமூகநீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும், உறுதியும் எனக்கு அதிகமாகவே இருக்கின்றன.

காஞ்சிபுரம் நகரில் நடைபெறும் போராட்டத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று நடத்துவார். மற்ற இடங்களில் நடைபெறும் இந்த போராட்டங்களை பாமக மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமையேற்று நடத்துவர். தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக நடைபெறும் இந்தப் போராட்டங்களில் அனைத்த் தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கனமழையால் ஸ்தம்பித்த சென்னை! நெரிசலில் சிக்கிய வாகனங்கள்!

சென்னையில் பெய்த கனமழையால் போரூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் வாகனங்கள் சிக்கியது.வங்கக்கடலில் உருவாக்கியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை புறநகர்ப் பகுதிகளில... மேலும் பார்க்க

தீவிரமடையும் மழை... சென்னை நோக்கி வரும் மேகக்கூட்டங்கள்!

சென்னையில் இன்று காலை சில மணி நேரம் கனமழை பெய்த நிலையில், அடுத்த சுற்று மழை தொடங்கவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் தெரிவித்துள்ளார்.நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகு... மேலும் பார்க்க

உணவு, குடிநீரின்றி 65,000க்கும் மேற்பட்டோர் தவிப்பு: ஐ.நா.

காஸா: காஸாவின் வடக்கு பகுதியினுள் வெளியிலிருந்து நுழையும் மனிதாபிமான உதவிகள் அனைத்தும் இஸ்ரேல் ராணுவத்தினால் தடுக்கப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான காஸா மக்கள் அத்தியாவசிய உதவிகளின்றி தவிப்பதாக ஐக்கிய ந... மேலும் பார்க்க

மோசமான வானிலை: சென்னையில் 13 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னையில் புதன்கிழமை காலை முதல் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை தீபம்: சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்- அமைச்சர் சேகர்பாபு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌ எனவும்,பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது குறித்து அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் வ... மேலும் பார்க்க