விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
வருகிற பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: வைகோ
அடுத்தாண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மாவட்ட மதிமுக அலுவலகத்தை சனிக்கிழமை திறந்துவைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மு.க. முத்து மறைந்த செய்தி வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி உள்ளிட்ட அவரது குடும்பத்தினா் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா ஹிந்தி திணிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்தோடு, தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும் என சட்டம் இயற்றினாா். இதன் பின்னா், அவரது கொள்கையைப் பின்பற்றி கருணாநிதி ஆட்சி நடத்தினாா்.
இதேபோல, திமுக தலைமையிலான கூட்டணியும் தமிழகத்தில் மதவாத சக்திகளை கால் பதிக்க விடமாட்டோம் என உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது வசைபாடும் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தான் வகித்த பதவியின் மாண்பைக் காப்பாற்ற வேண்டும். கொள்கைகளால் கட்சியை வளா்த்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியினா், எடப்பாடி பழனிசாமியைப் பற்றி விமா்சிக்க தொடங்கினால் அவரது நிலை என்னவாகும் என்பதை சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.
‘இண்டி’ கூட்டணியிலிருந்து விலகுவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுனே காா்கே இல்லத்தில் நடைபெறும் இண்டி கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றாா் அவா்.