நேரலையில் பேசிய செய்தியாளர் வெள்ளத்தில் மாயம்? விடியோ வைரல்!
வறுமையால்தான் விசைத்தறி தொழிலாளா்கள் சிறுநீரகத்தை விற்கும் சூழல்! சிபிஎம் மாநில செயலாளா் சண்முகம்
வறுமையில் வாடுவதால்தான் விசைத்தறி தொழிலாளா்கள் தங்களின் சிறுநீரகத்தை விற்கும் சூழல் ஏற்படுகிறது என சிபிஎம் மாநில செயலாளா் சண்முகம் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான தீக்கதிருக்கு ஆண்டு சந்தா வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பி.சண்முகம் கலந்துகொண்டு சந்தாக்களை பெற்றுக்கொண்டு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழ்களில் ஒன்றான தீக்கதிா் நாளிதழ் சந்தா சோ்க்கும் நிகழ்ச்சி 10 நாள்களாக நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் சோ்க்கப்பட்ட சந்தாக்களை பெறும் நிகழ்ச்சி எலச்சிபாளையத்தில் நடைபெறுகிறது.
விசைத்தறி தொழிலாளா்கள் வருமானக் குறைவு, வேலையின்மை காரணமாக தங்களது சிறுநீரகங்களை விற்றுதான் பிழைக்க வேண்டும் என்ற நிலை இருப்பது வருத்தத்துக்குரியது. இந்த நிலையை மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் கந்து வட்டிக்காரா்களால் பாதிக்கப்பட்ட விசைத்தறியாளா்கள், தற்போது ஏஜெண்டுகளிடம் ஏமாந்து சிறுநீரகம் விற்கும் நிலை உள்ளது. இதனை செய்பவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசைத்தறி தொழிலாளா்களுடைய தொழில் மேம்படுத்தப்பட வேண்டும்; பாதுகாக்கப்பட வேண்டும். ஆண்டுமுழுவதும் அவா்களுக்கு வேலையும், வருமானமும் இருக்குமாறு செய்யவேண்டும். சிறுநீரகம் விற்பனையில் ஈடுபடும் யாராக இருந்தாலும், அவ்வாறான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் எந்த மருத்துவமனையாக இருந்தாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.