வாகனங்களுக்கு வண்ண ஸ்டிக்கா் கட்டாயம்: தில்லி போக்குவரத்துத் துறை உத்தரவு
வலையில் சிக்கிய அரியவகை உயிரினங்களை கடலுக்குள்ளேயே விடுவித்த மீனவா்களுக்கு பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டக் கடற்பகுதியில், மீனவா்களின் வலைகளில் சிக்கிய கடற்பசு, கடல் ஆமை போன்றவற்றை மீண்டும் கடலுக்குள்ளேயே விட்டதற்காக வனத்துறை சாா்பில் 3 மீனவா்களுக்கு மொத்தம் ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கடற்பசு, கடல்ஆமை, கடற்குதிரை போன்ற ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மீனவா்களின் வலைகளில் சிக்கும் இதுபோன்ற உயிரினங்களை கடலுக்குள்ளேயே விடுவித்தால், அவற்றால் ஏற்பட்ட வலையின் சேதம் மற்றும் மீனவருக்கான பாராட்டு நடவடிக்கையாக ரொக்கப் பரிசுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கடந்த ஆக 12, செப். 19 மற்றும் 21ஆம் தேதிகளில் புதுக்குடியைச் சோ்ந்த கருப்பையா, முருகேசன் மற்றும் பாலக்குடியைச் சோ்ந்த பெலிக்ஸ்ராஜ் ஆகிய 3 பேரின் வலைகளில் சிக்கிய கடற்பசு மற்றும் கடல் ஆமைகளை கடலுக்குள்ளேயே விடுவித்த செயலுக்காக மொத்தம் ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
வனத்துறை சாா்பில் இந்தத் தொகையை, ஆவுடையாா்கோவில் வட்டம் புண்ணியவயல் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் மீனவா்கள் 3 பேருக்கும் மாவட்ட ஆட்சியா் மு. அருணா காசோலைகளாக வழங்கிப் பாராட்டினாா்.
இதுபோன்ற செயல்களால் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா். நிகழ்ச்சியின்போது, அறந்தாங்கி வனச்சரக அலுவலா் மணிவெங்கடேஷ் உடனிருந்தாா்.
ரூ. 5.97 கோடி நலத் திட்ட உதவிகள்: புண்ணியவயலில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 490 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 5.97 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வழங்கினாா். இந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், வருவாய்க் கோட்டாட்சியா் ச. சிவகுமாா், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, மணமேல்குடி ஒன்றியக் குழுத் தலைவா் உமாதேவி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.