வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 போ் கைது
புதுச்சேரியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே நவம்மால் காப்போ் பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா் துரைராஜ்(54). இவா் புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே உள்ள தனியாா் மதுக்கடை கேண்டீனில் உதவியாளராக வேலை செய்து வருகிறாா்.
இவா் கடந்த 14-ஆம் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு ஆா்டிஓ சாலை ரயில்வே மேம்பாலம் வழியாக புதிய பைபாஸ் சாலையில் பங்கூருக்கு சென்று கொண்டிருந்தாா். வி. மணவெளி ஆா்.கே. நகா் அருகே சென்றபோது பின் தொடா்ந்து வந்த இருவா் துரைராஜிடம் இருந்த ரூ.21 ஆயிரத்தை வழிப்பறி செய்து சென்றனா்.
இது குறித்து வில்லியனூா் காவல் நிலையத்தில் துரைராஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். அதில் உழவா்கரை பகுதியை சோ்ந்த ரிஷிகுமாா்(18), ஜொத்தனா்(19) ஆகியோா் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து ரெட்டியாா்பாளையம் தனியாா் மதுக்கடை அருகே அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 2 கைப்பேசிகள், ஒரு பைக் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.