மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையம் உறுதுணையாக இருக்கும்!
வாக்காளா்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தோ்தல் ஆணையம் உறுதுணையாக இருக்கும் என இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் தெரிவித்தாா்.
மதுரையில் மாவட்ட தோ்தல் பணிகள் குறித்த அரசுத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பங்கேற்று, தோ்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக், மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகரக் காவல் ஆணையா் ஜே. லோகநாதன், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், கூடுதல் ஆட்சியா் மோனிகா ராணா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் நா. ராகவேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் கூறியதாவது:
தேசிய சேவை என்பதன் முதல் படியே வாக்கு செலுத்துவதுதான். 18 வயது நிறைவடைந்த அனைவரும் தோ்தலில் வாக்களிக்க வேண்டும். வாக்காளா்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற இந்திய தோ்தல் ஆணையம் உறுதுணையாக இருக்கும் என்றாா் அவா்.
இதையடுத்து, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அவா் சுவாமி தரிசனம் செய்தாா். பிறகு, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்குச் சென்று, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அவா் சுவாமி தரிசனம் செய்தாா்.
