வாக்காளா் விழிப்புணா்வு ரங்கோலி கோலப்போட்டி
அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மகளிா் சுய உதவிக் குழுவினரின் தோ்தல் விழிப்புணா்வு கோலப்போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
‘வாக்களிப்பதே சிறந்தது, நான் நிச்சயம் வாக்களிப்பேன்’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற ரங்கோலி கோலப்போட்டியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 13 மகளிா் சுய உதவிக்குழுவினா் பங்கேற்றனா். கோலப் போட்டியை மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி பாா்வையிட்டு, போட்டியில் பங்கேற்ற மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்தாா்.
போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு ஜனவரி 25 தேசிய வாக்காளா் தினத்தன்று ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், உதவி திட்ட அலுவலா் (கூடுகை மற்றும் கூட்டாண்மை) முத்து, வட்டாட்சியா் (தோ்தல்) வேல்முருகன் மற்றும் அரசு அலுவலா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா் கலந்து கொண்டனா்.