பணியாளர்களை குறைக்க அரசுத் துறைகளுக்கு கெடு விதித்த டிரம்ப்!
வாணியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீரை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் திறந்து வைத்தாா். வாணியாறு அணையில் இருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு வாணியாறு நீா்த்தேக்கத் திட்ட வரைவு விதிகளின்படி, வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்கள் வழியாக மே மாதம் வரையிலும் 65 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படவுள்ளது.
இதனால் வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், அலமேலுபுரம், தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி புதூா், மோளையானூா், கோழிமேக்கனூா், பாப்பிரெட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, கவுண்டம்பட்டி, எச்.புதுப்பட்டி, தேவராஜபாளையம், மெணசி, பூதநத்தம், ஜம்மனஹள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறும்.
எனவே, வாணியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரைச் சிக்கனமாக பயனுள்ள வகையில் பயன்படுத்தி வேளாண் பணிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் ஆ.மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.